ஆனைக்கோட்டையின் பூர்வீக-தொன்மையான நாகரிகம் எப்போதிருந்து வளர்ந்து வருகிறது என்ற உண்மைகள் வெளிவரும்

46 0
image

ஆனைக்கோட்டையின் பூர்வீகதொன்மையான நாகரீகம் எப்போதிலிருந்து வளர்ந்துவருகின்றது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை உள்ளதாக வாழ்நாள் பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆனைக்கோட்டையில் ஏறத்தாள 9 அடிக்கு மேல் 11 கலாச்சார மண்ணடுக்குகள் கண்டறியப்பட்டுள்ளனஎன அவர் குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

இலங்கையின் பூர்வீகக் குடியிருப்பு மையங்கள் பற்றி தென்னாசிய தொல்லியலாளர்களால் அறியப்பட்ட இடங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் 1980 ஆம் ஆண்டு பேராசிரியர் ரகுபதி அவர்களால் அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் பேராசிரியர் இந்திரபாலா பேராசிரியர் சிற்றம்பலம்பேராசிரியர் கிருஷ்ணராஜா பல்கலைக்கழக நூலகராக இருந்த ஆ.சிவனேசசெல்வன் ஆகியோரும் மற்றும் பொருளியல் புவியியல் தமிழ்த்துறை ஆசிரியர்கள்தும் மாணவர்களதும் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக 2300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரண்டு மனித எலும்பு கூடுகளும் அதன் ஒரு எலும்புக்கூட்டின் தலை மாட்டுப்பகுதியில் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட முத்திரை மோதிரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் அந்த அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து தொல் பொருட்களையும் 1988 ஆம் ஆண்டு நாம் முழுமையாக இழந்துவிட்டோம். கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை பார்வையிடுவதற்கு பிறர் வருகின்ற போது பெருமையோடு காட்டக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஆனைக்கோட்டையின் அகழ்வு இடம் கருத்தில் கொள்ளக்கூடியதாக இன்று வரை இருக்கவில்லை.

இந்த நிலையில் தான் 1980 களின் பின்னர் பலரால் ஆனைக்கோட்டையில் அகழ்வு செய்யப்பட வேண்டும் என்று விரும்பி இருந்தாலும் அந்த விருப்பம் 44 ஆண்டுகளுக்கு பின்னர் இப்பொழுதுதான் நடைமுறைக்கு வந்துள்ளது.

1980 களில் இலங்கையில் மட்டுமின்றி தென்னாசியாவிலும் அகழ்வாய்வுக்குரிய நவீன தொழில் நுட்ப வசதிகள் இருக்கவில்லை.

இப்பொழுது நவீன தொழில் நுட்பவசதிகள் பல மாற்றங்களோடு வளர்ச்சி அடைந்துள்ளன. அந்த வசதிகள் அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம் என்று பெருமை கொள்ளாவிட்டாலும் முடிந்த அளவு நவீன வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் ஒரு விஞ்ஞான பூர்வமான மிகப்பெரிய ஒரு அகழ்வாராய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதில் நாம் திருப்தி அடைய இடம் உண்டு.

ஆனைக்கோட்டையில் இந்த அகழ்வாராய்ச்சியானது 20.06.2024 இல் சம்பிரதாய பூர்வமாகத் தொடங்கிய பொழுது அதனை முக்கியப்படுத்தி ஊடகங்கள் பலவற்றில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இரண்டு வாரங்கள் கழித்தும் அங்கு என்ன நடக்கிறது என்ற கேள்வி பலருக்கு எழுகின்ற அதே நேரத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் தான் ஊடகங்களில் அது பற்றிய செய்திகள் வெளியிடப்படவில்லை என்ற விமர்சனங்களும் வருகின்றன.

இந்த நிலையில் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பிருந்து பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள்இ பொது நலன் விரும்பிகள் ஆர்வலர்கள் எனப்பலரும் அங்கு வருகைதந்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கு வந்து சில புகைப்படங்களை எடுத்து தமது முக நூல்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள் எனினும் நாங்கள் எங்களுடைய செய்திகளை இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் இலங்கைத் தொல்லியல் சட்டத்தில் ஓர் அகழ்வாய்வுக்கு அனுமதி வழங்குகின்ற பொழுதுஇ பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் பொதுவானவை. அதில் ஒரு நிபந்தனை அகழ்வாய்வு முடிந்து அதன் பெறுபேறுகள் சரியாக ஆவணப்படுத்துவதற்கு முன்னர் அதுபற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது என்பதாகும்.

நாங்கள் ஒரு தொல்லியல் ஆய்வாளர் என்ற வகையில் தொல்லியல் கட்டுப்பாடுகளுக்கு கட்டுண்டு நடக்கும் பொருட்டு. நாங்கள் இதுவரை செய்திகளை வெளியிடவில்லை.

எனினும் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதும் அதை இட்டு ஊடகவியலாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கேள்வி எழுப்புவதும் விசாரணை செய்வதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவற்றை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் சில விடயங்களை இங்கே நாங்கள் குறிப்பிடக் கூடியதாக இருக்கிறது.

இதுவரை ஆனைக்கோட்டையில் ஏறத்தாள 9 அடிக்கு மேல் 11 கலாச்சார மண்ணடுக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. நாலாவது கலாச்சாரமண்ணடுக்கில் பெறுமதியான பல தொல்பொருள் சான்றுகள் வருகின்றன.

அந்தத் தொல்பொருள் சான்றுகளை தொடர்ந்து அகழ்வு செய்யப்படுகின்ற போது ஆனைக்கோட்டையில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஆதி இரும்புக்கால அல்லது பெருங்கற்காலப் பண்பாட்டு மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் முன்னைய ஆய்வுகளில் கிடைக்காத அரியவகையான பல சான்றாதாரங்களும் கிடைக்கின்றன. இதில் அயல் நாடுகளுக்கும் ஆனைக்கோட்டைக்கும் இடையிலான தொடர்புகளையும் உறவுகளை அறியக் கூடிய சான்றுகளும் காணப்படுகின்றன.

இந்த நிலையில் ஆனைக்கோட்டையில் கிடைக்கின்ற சான்றுகளை வைத்து பார்க்கும் போதுஇ 1970களில் விமலா பேக்லி என்ற பெஞ்சில்வேனிய பல்கலைக்கழக அரும்பொருள் ஆய்வாளர் கந்தரோடையில் அகழ்வு செய்த போது அவற்றின் கண்டுபிடிப்புகளை வைத்து கந்தரோடையில் வாழ்ந்த பூர்வீக மக்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கலாம் அல்லது இங்கு வாழ்ந்த மக்கள் தமிழகத்து மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கலாம்.

இந்த பண்பாட்டுக்குரிய மக்கள். கந்தரோடையிலிருந்து புத்தளம் வரை பரவி வாழ்ந்திருக்கலாம் என்று ஒரு கருத்தை முன் வைத்தார்.

அந்தக் கருத்தை எமது அகழ்வுகள் மேலும் உறுதி செய்கின்ற அதே நேரத்தில்இ இந்த பண்பாட்டுக்கு முன்னரும் மக்கள் வாழ்ந்து இருக்கலாம் என்ற ஒரு சமிக்ஞை அல்லது சில ஆதாரங்கள் கிடைக்கின்ற வாய்ப்பு உண்டு.

தொடர்ந்தும் நாங்கள் அகழ்வு செய்யும் பொழுது தான் அவற்றை உறுதிப்படுத்தலாம். இந்த அகழ்வின் போது கண்டறியப்பட்ட சில மாதிரிகளை நாங்கள் நவீன காலக்கணிப்புக்கு உட்படுத்த இருக்கின்றோம்.

அந்தக் காலக் கணிப்புகள் மூலம் ஆனைக்கோட்டையின் பூர்வீக-தொன்மையான நாகரிகம் எப்போதிருந்து வளர்ந்து வருகிறது என்ற உண்மைகள் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அகழ்வாய்வு முடிந்து ஓரிரு வாரங்களுக்குள் நாங்கள் அறிக்கையாக நூலாக தொல்லியல் திணைக்களத்துக்கு சமர்ப்பிப்போம்.அங்கு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களுக்குமான உண்மைகளை மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவோம்.

அதுவரை இந்த அகழ்வு பற்றி அங்கு கிடைத்த ஆதாரங்கள் பற்றி நாங்கள் வெளியிடுவது தொல்லியல் சட்ட விதிகளுக்கு முரணானது என்பதனால் அதை நாங்கள் மதித்து இந்த அகழ்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.

புலம்பெயர் நிதிப்பங்களிப்புடனும் யாழ்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடன் இவ் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பாக 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த 1980 ஆய்வுகளின் பங்கெடுத்தவரான வரலாற்றுத்துறையின் விரிவுரையாளராக அப்போதிருந்த சுப்பிரமணியம் விசாகன் தற்போது இலண்டனில் வசிப்பவர் இவ்விடத்தில் மீண்டும் ஓர் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் இவ்விடம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்தார் தற்போது இவ் எண்ணம் நிறைவேறி வருவதைக் காணலாம்

இவ்வாய்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறையின் நான்காம் மூன்றாம் இரண்டாம் வருட மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாண தென்னிலங்கை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப்பலரும் ஆர்வத்துடன் பங்கு பற்றி வருகின்றனமை மகிழ்ச்சி அளிக்கின்றது

பட உதவி-ஈழத்துவரலாறும் தொல்லியலும் முகநூல்