மின்கட்டண குறைப்பு – முழுமையான விபரங்கள் இதோ !

36 0

மின்கட்டணத்தை 22.5 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.புதிய கட்டணத் திருத்தத்தை இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்துமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின்கட்டணம் குறைவடைந்துள்ளது என்பதற்காக மின்சாரத்தை வீண்விரயம் செய்வதை தவிர்த்துக் கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு ஆணைக்குழு மின்பாவனையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகள் மற்றும் மின்கட்;டணம் திருத்தம் குறித்து பொது மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் 22. 5 சதவீதத்தால் கட்டணத்தை திருத்தம் செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வீட்டு பாவனைக்கான மின்கட்டணத்தை 27 சதவீதத்தாலும்,மத தலங்களுக்கான கட்டணத்தை 30 சதவீதத்தாலும்,ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணத்தை 25 சதவீதத்தாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய மொத்த மின்கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வியாபாரமாக தமது தொழிற்றுறையை உரிய அரச நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும்.அப்போது தான் அவர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான நிவாரணம் மின்கட்டண குறைப்பு ஊடாக கிடைக்கப் பெறும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ மின்கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானத்தை அறிவித்தார்.

இதற்கமைய வீட்டு பாவனை,மததலங்கள்,ஹோட்டல்,கைத்தொழிற்சாலைகள்,பொது பணிகள் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சகல நுகர்வு தொகுதிகளுக்குமான கட்டணங்கள் இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) குறைக்கப்படும்.இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவில் முழுமையான மின்கட்டணத்தை 10 சதவீதத்தால் குறைக்க பரிந்துரைத்துள்ள போதும் தரவுகளை ஆராய்ந்து மின்கட்டணத்தை 22.5 சதவீதத்தால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்மைய வீட்டு மின்பாவனைக்கான மின்கட்டணம் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மத தலங்களில் குறைவான மின்பாவனையுடனான தொகுதிகளுக்கு இதுவரை அறவிடப்பட்ட 8 மற்றும் 9 ரூபாய் என்ற அடிப்படையிலான ஒரு அலகுக்கான கட்டணத்தை 6 ரூபாவாக குறைப்பதற்கும்,18 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 10 ரூபாவாகவும்,32 ருபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 20 ரூபாவாகவும்,43 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 30 ரூபாவாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத தலங்களுக்காக அறவிடப்பட்ட மாத நிலையான கட்டணத்துக்கான அனைத்து தொகுதிகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்கள் மற்றும் பொது பணிகளுக்கு ஒரு அலகுக்காக இதுவரை அறவிடப்பட்ட 55 ரூபா, 45 ரூபா, 37 ரூபா முறையே 46.75 ரூபா,38.25 ரூபா, 31.45 ரூபா என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்த்தத்துடன் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது.மின்பாவனையாளர்கள் கோரினால் அவர்களுக்கு மின் கட்டண பற்றுச்சீட்டினை விநியோகிக்க வேண்டும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் மின்னுற்பத்திக்காக  எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யுமாறும்,2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டின் செலவுகள் குறித்து விரிவான சுயாதீன கணக்காய்வினை மேற்கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மின்சார சபைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்பதற்காக மின்சாரத்தை வீண்விரயம் செய்வதை மின்பாவனையாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.மத தலங்களில் மின்சாரம் எவ்வித சிக்கனமும் இல்லாமல் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.ஆகவே மின்னுற்பத்தியை வரையறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமாயின் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.