“தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உறுதியேற்போம்” – அன்புமணி

53 0

தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த காமராசரின் 122-ஆம் பிறந்த நாளில் உறுதியேற்போம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் என்று போற்றப்பட்ட கர்மவீரர் காமராசரின் 122-ஆம் பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமகனார் அவர் தான்.

தமிழ்நாட்டில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது மட்டுமின்றி, வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.

ஆனால், தமிழ்நாட்டில் இன்று அரசு பள்ளிகளின் நிலைமை கண்ணீரை வரவழைக்கிறது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை, வகுப்பறைகள் இல்லை, கழிப்பறைகள் இல்லை. அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய தமிழக அரசோ, தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் கல்விக் கட்டணக் கொள்ளையை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி அரசு பள்ளிகளை அனைவரும் தேடி வந்து கற்கும் கல்விக் கோயில்களாக மாற்றுவதற்கு இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.