சாலையில் ஆடு வெட்டுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

31 0

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கோவை தொகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். ஆனால் அவர் 4,50,132 வாக்குகளை பெற்று 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை தழுவினார்.

அண்ணாமலை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவரது புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி மர்மநபர்கள் பலியிட்டுள்ளனர். இச்சம்பவம் எங்கு? எப்போது? நடைபெற்றது என்பது தெரியவில்லை. அண்ணாமலைக்கு எதிராகவும் கோஷமிட்டுள்ளனர்.

இந்த பயங்கர செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை தோல்வியைக் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரியில் ஆடு வெட்டப்பட்டதாக பாஜக பிரமுகர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆடு தலையில் அண்ணாமலை படத்தை மாட்டி வெட்டிய தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது\” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.