திருகோணமலையில் மூவின மக்களிடையே பிரிவினையை காணவில்லை: சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்

35 0

என்னதான் யுத்தம் காணப்பட்டாலும் மூவின மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது என பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் நடைபெற்ற அஸ்வெசும நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது நேற்று(13.07.2024) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர்,

“ அஸ்வெசும பயனாளிகள் 27 இலட்சம் பேர் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டாலும் எமது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 12 இலட்சம் குடும்பங்களை பலப்படுத்துகின்ற ஒரு பாரியளவு வேலைத்திட்டமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற இந்த வேலைத்திட்டத்தை தனியாக ஒரு அரசியல்வாதியாக நானோ அல்லது ஜனாதிபதியோ இணைந்து செயற்படுத்த முடியாது.

அத்துடன், 25,000 இற்கும் மேற்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள்.
12 லட்சம் குடும்பங்களை பலப்படுத்துவதற்கு நாங்கள் மட்டும் போதாது, அரச உத்தியோகத்தர்களும் இணைந்தால் தான் இவ்வாறான அரச கொள்கைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

எனவே சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு அரச உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும். ஒன்றிணைந்தால் மாத்திரமே 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை பலப்படுத்த முடியும். அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரள, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், துறை சார்ந்த அதிகாரிகள், துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.