மதுவரித் திணைக்களம் குறித்து அதிருப்தி!

28 0

2023 இற்கான முழுமையான வரி நிலுவையான 1.1 பில்லியன் ரூபாய் நிதியை 2024.06.30 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மது உற்பத்தியாளர்களிடமிருந்து அறவிடுமாறு 2024.04.24 ஆம் திகதி வழிவகைகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரையின் முன்னேற்றம் தொடர்பில் பரிசீலிக்கும் போது குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு அமைய, அது தொடர்பில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து குழு அதன் கடுமையான அதிருப்தியை வெளியிட்டது.

இங்கு மதுவரித் திணைக்களம் குறிப்பிடுகையில், வழிவகைகள் பற்றிய குழு வழங்கிய பரிந்துரை மற்றும் முன்னைய ஆண்டுகளின் மது வரி அறவிடுதல் தொடர்பான ஒப்பந்தங்கள் என்பவற்றுக்கிடையிலான முரண்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி 2024.05.02 ஆம் திகதி கடிதம் மூலம் நிதி அமைச்சிடம் வினவியிருந்தாலும் நிதி அமைச்சு தரப்பிலிருந்து பதிலொன்று கிடைக்கவில்லை எனத் தெரிவித்தது.

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் 2024.07.10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இங்கு, டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனம் 1,659 மில்லியன் ரூபாய், ஹிங்குரான டிஸ்டிலரீஸ் நிறுவனம் 102 மில்லியன் ரூபாய், சினர்ஜி நிறுவனம் 37 மில்லியன் ரூபாய், வயம்ப டிஸ்டிலரீஸ் 79 மில்லியன் ரூபாய் என்றவகையில் 2023 ஆம் ஆண்டு முதல் 2024.06.15 ஆம் திகதி வரையான நிலுவை வரி மற்றும் வருமானம் 1.8 பில்லியன் ரூபாய் என குழுவில் புலப்பட்டதுடன், இவ்வாறு நிலுவை வரியை முழுமையாக அறவிடுமாறு குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டிருந்த நிலையில், மதுவரித் திணைக்களத்தினால் அதன் கடமையை புறக்கணித்துள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்துக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்துவதாக குழுவினால் வலியுறுத்தப்பட்டது.

மேலும், டபிள்யு.எம். மெண்டிஸ் நிறுவனம் தவிர்ந்த ஏனைய நிறுவங்களுடன் மதுவரித் திணைக்களம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் தற்பொழுது செயலற்ற நிலையில் உள்ளதாகவும் இங்கு புலப்பட்டது.

இது தொடர்பில் முறையான நடவடிக்கை எடுப்பதற்கு மது வரி ஆணையாளர் நாயகத்துக்கு முடியாமல் போயுள்ளதாகவும், அவ்வாறு உள்ள நிலையில் ஆணையாளர் நாயகம் வழிவகைகள் பற்றிய குழுவை புறக்கணித்து வருவதாகவும், மதுவரித் திணைக்களம் குழுவின் பரிந்துரைகளை பொருட்படுத்தாமல் இருப்பதாகவும், அது பாராளுமன்றத்தையும் குழுவையும் அகௌரவிப்பதாகும் என குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2023 இற்கான நிலுவை மது வரியை செலுத்தாத நிறுவனங்களின் மது உற்பத்தியை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மீண்டும் நிதி அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு குழுவின் செயலாளருக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

பொதுமக்களுக்கு வரி விதிக்கும் பின்னணியில், நிலுவை வரிகளை செலுத்தாத மது உற்பத்தியாளர்கள் தொடர்பில் மதுவரித் திணைக்களம் தளர்வான கொள்கையை பின்பற்றுவது தொடர்பிலும் குழு அதன் அதிருப்தியை வெளியிட்டது.

அத்துடன், நான்கு குழுக் கூட்டங்களில் குழுவினால் நிதி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்தாமை தொடர்பிலும் குழுவின் கடுமையான அதிருப்தி வெளியிடப்பட்டது.

அத்துடன், அவசர அனர்த்த சூழ்நிலையில் தலையிடுவதன் கீழ், கண்டி புகையிரத நிலையம் வெள்ளத்தினால் மூழ்கிய விடயம் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இங்கு, கண்டி புகையிரத நிலையம் உள்ளடங்கிய வடிகான் கட்டமைப்பு போதுமானதாக இல்லை எனவும், அவற்றின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் என்பன விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உலக வங்கியின் கவனத்தை ஈர்ப்பதற்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு இந்தப் பிரேரணையை முன்வைக்குமாறும், அதற்கு புகையிரத திணைக்களத்தையும் சம்பந்தப்படுத்திக்கொள்ளுமாறும் குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அவிசாவளை பிரதேசத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் சேற்று நீர் கலந்த நீர் விநியோகிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனு தொடர்பிலும் இதன்போது மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிக்கலுக்குக் காரணமாக உள்ள அனுமதி வழங்கப்பட்ட மற்றும் அனுமதி வழங்கப்படாத இரத்தினக்கல் அகழ்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடன் இணைந்து சிக்கலுக்குக் காரணமான கெடஹெத்த கால்வாயுடன் தொடர்புடைய இரத்தினக்கல் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும், அது தொடர்பில் கண்காணிப்பு செய்து அதன் அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவுக்கு வழங்குமாறும் குழுவின் தலைவர் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.