பொலிஸார் நீதிபதிகளைப் போல் தீர்ப்பு எழுதியுள்ளார்கள் நீதிமன்றத்துக்கு இனி வேலையில்லை

33 0

படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்தவின் விவகாரத்தில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.பொலிஸார் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள். ஊடகங்களை வைத்துக் கொண்டு சந்தேக நபரிடம் வாக்குமூலம் பெற்ற  பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட வேண்டும்.பொலிஸார் நீதிபதிகளை போல் தீர்ப்பு எழுதியுள்ளார்கள்.தீர்ப்பை அவர்கள் அறிவிக்க வேண்டும் என நீதியமைச்சர் விஜயதாஜ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய சுயாதீன உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,கிளப் வசந்தவின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட  பச்சை குத்தும் நபரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்ற விதம் எவ்வாறு ஊடகங்களில் வெளியானது. சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் இந்த சந்தேக நபரிடம் ஊடகங்களை வைத்துக் கொண்டு வாக்குமூலம் பெறுகிறார்.இனி நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்கு ஏதும் இல்லை.

கொலை செய்யப்பட்ட  கிளப் வசந்தவின் பிரேதப் பரிசோதனையின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அவரது உடல் பாகங்களை வெட்டுவதும்,தலையிலிருந்து துப்பாக்கி தோட்டாக்களை வெளியில் எடுப்பதும் காணொளியாக பதிவு செய்யப்பட்டு  சமூக வலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது.ஆகவே அந்த பிரேத அறையின் ஊழியர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என நீதியமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

இதற்கு எழுந்து பதிலளித்த  நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,தயாசிறி குறிப்பிட்ட விடயங்களை சமூக வலைத்தளங்களில் நானும் அவதானித்தேன். படுகொலைகள் பாரதூரமானவை. தண்டனை சட்டக் கோவையில் ஒரு சம்பவம் தொடர்பில்  விசாரணை செய்யப்படும் விதம், நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டிய முறைமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகங்களை வைத்துக் கொண்டு சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெற முடியாது. ஆகவே அந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக  கைது செய்யப்பட வேண்டும். இதனை நீதிமன்ற அவமதிப்பு செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும்.ஆகவே பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ள அதிகாரிகளைக் கைது செய்வதற்குப் பொறுப்பான நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.ஏனெனில் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு ஏதும் கிடையாது.பொலிஸார் தீர்ப்பு எழுதி விட்டார்கள்.இனி அவர்கள் அதனை அறிவிக்க வேண்டும்.பொலிஸ் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.