ஆளுமை மிக்க பெண்கள் சமூகத்தில் மலர வேண்டும்

29 0

பெண்கள் குடும்பத்தின் ஒளி விளக்குகள், ஆளுமையில் சிறந்த பெண்கள் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண  கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்  என். தனஞ்சயன் தெரிவித்தார்.

திணைக்களத்தால் பெண்களுக்கு தையல் பயிற்சி உட்பட வாழ்க்கை திறன் கற்கை நெறி வருடாந்தம் கற்பித்து கொடுக்கப்படுகின்றது.

2023/2024 கல்வியாண்டை நிறைவு செய்த பெண்களின் ஆக்க திறன் வெளிப்பாட்டு கண்காட்சி வியாழக்கிழமை (11) மருதமுனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ஏ. ஜாபிர் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார்.

அம்பாறை மாவட்ட  கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  எம்.ரீ.ஏ.நாஹிப்  அடங்கலாக உயரதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாகாண பணிப்பாளர் தனஞ்சயன் தெரிவித்தவை வருமாறு;

பெண்கள் குடும்பத்தின் ஒளி விளக்குகள். ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் வகிபாகம் மிக முக்கியமானது. பெண்கள் சிறப்பாக செயற்பட வேண்டியது அவசியமானது.

எனவேதான் வாழ்க்கைக்கு தேவையான திறன்களை பெண்கள் வளர்த்து கொள்ள வேண்டும் என்பதில் எமது திணைக்களம் பற்றுறுதியுடன் செயற்பட்டு வருகிறது.

ஆகவேதான் தையல் அடங்கலாக  பெண்களுக்கு தேவையான வழிகாட்டல் பயிற்சிகளை நாம் வழங்கி வருகிறோம்.

ஆளுமையில் சிறந்த பெண்களை சமூகத்தில் உருவாக்குவதை நோக்கமாக கொண்டு எமது கற்கை நெறி  வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

பாடசாலை கல்வியை தொடர முடியாமல் இடை விலகியவர்களுக்கும் இக்கற்கை நெறி வரப்பிரசாதம் ஆகும். ஏனென்றால் வாழ்க்கையில் உயர்வதற்கு இப்பயிற்சி நெறி ஊக்கியாக அமையும்.

வருடாந்தம் சுமார் 40 பெண்களை கற்கைநெறியில் இணைத்து கொள்கின்றோம்.  இவ்வேலை திட்டத்துக்காக உண்மையில் பெருமளவு நிதியை செலவிடுகின்றோம்.