ரஷ்யாவுக்கு உளவு தகவல் வழங்கிய அவுஸ்திரேலிய தம்பதியினர் கைது!

32 0
ரஷ்யாவை பிறப்பிடமாகக்கொண்ட இரு அவுஸ்திரேலிய  பிரஜைகள் ரஷ்ய அதிகாரிகளுக்கு உளவு தகவல்களை வழங்கிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  பிரிஸ்பேர்னில்   வசிக்கும் தம்பதியினரே   கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தம்பதியினருக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் புதிய வெளிநாட்டு தலையீட்டு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறைந்தபட்சம் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2018 இல் வெளிநாட்டு தலையீட்டு சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இத்தம்பதியினருக்கு எதிராகவே இச்சட்டம் முதன்முறையாக தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையிலும் இருந்துள்ளனர். குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண் நீண்டகால விடுப்பில் இருந்தபோது ரஷ்யாவுக்கு இரகசிய பயணத்தை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

தம்பதியினர் ரஷ்ய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு தகவல்களை வழங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பில் விசாரணை  இடம்பெறுகின்றது.

இவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர் பிணை மனு முன்வைக்கப்படவில்லை. அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு அனுமதி பெற்றிருந்த ஒருவர் எவ்வாறு ரஷ்யாவுக்கு சென்றார் என்பது பற்றியும் ஆராயப்படுகின்றது. இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைப்புகளால்தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் விசாரணை தொடர்வதால் மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என தெரியவருகின்றது.