இராஜதந்திர ரீதியில் இலங்கையின் அக்கறைக்குரிய விடயங்களைப் பாதுகாப்பது அவசியம்

24 0

இராஜதந்திர அடிப்படையில் இலங்கையின் அக்கறைக்குரிய விடயங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, ஏனைய இறையாண்மையுடைய நாடுகளை சமத்துவ மட்டத்தில் வைத்து எமது நாட்டின் நிலைவரத்தை மீளாய்வுக்கு உட்படுத்தவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தின் 2022 / 2023ஆம் ஆண்டுக்கான 25ஆவது பட்டமளிப்பு நிகழ்வு புதன்கிழமை (10) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், விசேட அதிதியாக வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் கலந்துகொண்டு, இராஜதந்திர மற்றும் உலகளாவிய விவகார டிப்ளோமா கற்கைநெறி மற்றும் உயர் டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்திசெய்தோருக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தனர்.

அதேவேளை இப்பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் இராஜதந்திர மற்றும் உலகளாவிய விவகார கற்கைநெறி குறித்தும், அதன் அவசியம் குறித்தும், இக்கற்கைநெறியின் ஊடாக நாட்டில் உருவாக்கப்படும் தரம்வாய்ந்த இராஜதந்திரிகள் பற்றியும் நினைவுகூர்ந்ததுடன் தனது பாராட்டையும் வெளிப்படுத்தினார்.

அதுமாத்திரமன்றி தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு சமகால சவால்களை உரியவாறு கையாளல் மற்றும் உலகளாவிய விவகாரங்கள் தொடர்பில் முறையான கல்வி மற்றும் பயிற்சியை வழங்கவேண்டியதன் அவசியம் பற்றியும் அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தினார்.

அத்தோடு ‘இராஜதந்திர அடிப்படையில் இலங்கையின் அக்கறைக்குரிய விடயங்களைப் பாதுகாக்கும் அதேவேளை, ஏனைய இறையாண்மையுடைய நாடுகளை சமத்துவ மட்டத்தில் வைத்து எமது நாட்டின் நிலைவரத்தை மீளாய்வுக்கு உட்படுத்தவேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பரிணாம வளர்ச்சியடைந்துவரும் இவ்வுலகில் உள்நாட்டு சவால்கள் குறித்து மாத்திரமன்றி உலகளாவிய சவால்கள் குறித்தும் அறிவூட்டப்படவேண்டியது அவசியம் எனவும், சவால்களைப் போன்று வாய்ப்புக்கள் பற்றிய புரிந்துணர்வை வளர்க்கவேண்டிய தேவைப்பாடு உண்டு எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அதேபோன்று இந்நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, கற்கைநெறியைப் பூர்த்திசெய்த அனைத்து மாணவர்களினதும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், இந்நிகழ்வில் கலந்துகொண்டமை தொடர்பில் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.