ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்வது தேர்தல் செயற்பாடுகளை நெருக்கடிக்குள்ளாக்கும்.
அரசியலமைப்பின் 83(ஆ) உறுப்புரையை திருத்தம் செய்ய வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே இத்திருத்தம் தற்போது தேவையற்றது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் ஆறு நாட்களுக்குள் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும்.இருப்பினும் மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து நம்பிக்கையின்மையே காணப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்தேகம் ஏற்படுவதற்கு நான்கு காரணிகள் செல்வாக்கு செலுத்தின.ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் நீட்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கட்சி தவிசாளர் வஜிர அபேவர்தன ஜனாதிபதிக்கு மேலும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக குறிப்பிட்டார்.தேர்தலை பிற்போடும் அபாயகரமான பின்னணி ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு.1982 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சி ஊடாக பாராளுமன்றத் தேர்தல் ஆறு ஆண்டுகளுக்கு பிற்போடப்பட்டது.
2015 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு பிற்போடப்பட்டது.அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் காணாமலாக்கப்பட்டது இன்றும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.2022 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் காணாமலாக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும்,மாகாண சபைத் தேர்தலையும் பிற்போட்டதைப் போன்று இந்த தேர்தலும் பிற்போடப்படுமா ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து அரசியலமைப்பின் 83 ( ஆ) உறுப்புரையில் ‘ ஆறு வருடங்கள் என்பதற்கு பதிலாக ஐந்து வருடம் ‘ என்று மாற்றம் செய்ய திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 83(ஆ) உறுப்புரையை திருத்தம் செய்ய வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுப்பதற்கு ஒரு வாரம் காணப்படுகின்ற நிலையில் மக்கள் வாக்கெடுப்புக்கு செல்லும் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரும் போது தேர்தல் குறித்து நியாயமான சந்தேகம் எழுவது சரியானதே,இவ்விடயம் மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என இரண்டு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ள அமைச்சரவை அறியாமல் இருப்பது பிரச்சினைக்குரியதே,22 ஆவது திருத்தம் கொண்டு வருவது அவசியமற்றது என்றார்.