கொழும்பு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமைப் பத்திரங்கள்!

52 0

கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக முத்திரை மற்றும் நொத்தாரிசு கட்டணமாக 515 மில்லியன் ரூபாவை வழங்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அனுமதி வரம்புக்கு அமைவாக உரிய ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள 03 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக திறைசேரியால் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவுத் திட்ட பிரேரணையின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு அறுதி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இம்மாதம் 17 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப விழாவில், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன மற்றும் மெட்ரோ வீட்டுத் தொகுதிகளின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் வசிப்பவர்களுக்கும் சுமார் 1,500 உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

அறுதி உறுதிப் பத்திரங்கள் வழங்குவது அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்றார் அமைச்சின் செயலாளர் டப்ளியூ. எஸ். சத்யானந்த. பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிய உரிமைப் பத்திரம் இல்லாததால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த வீடுகளுக்கான வாடகையை செலுத்துவது கூட குடியிருப்பாளர்களுக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்தியதாகவும், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் சான்றிதழ் பெற்ற அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.