திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம்

39 0

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி விவகாரம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிகார நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றனவா என தாம் கண்காணிக்கவிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய 70 முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறுகள், அவர்கள் காதை மறைக்கும் விதமாக ஹிஜாப் அணிந்து வந்ததாகக் குறிப்பிட்டு உரிய காலப்பகுதியில் வெளியிடப்படாமல் இடைநிறுத்திவைக்கப்பட்ட (தற்போது வெளியிடப்பட்டுவிட்டது) சம்பவம் குறித்து கடந்த 8 ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை முன்னெடுத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இவ்விடயத்தில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி வியாழக்கிழமை (11) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அரசியலமைப்பின் 10 ஆவது சரத்தின் பிரகாரம் இலங்கைப்பிரஜைகள் அனைவரும் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்துக்கு உரித்துடையவர்களாவர். அதேபோன்று 12(2) சரத்து எந்தவொரு நபரும் பால் அல்லது மத அடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுவதை முற்றாகத் தடுக்கிறது. 14(1)(ஈ) சரத்து அனைத்துப்பிரஜைகளும் தமக்கு விரும்பிய மதம், நம்பிக்கை, வழிபாட்டுமுறை, நடைமுறை அல்லது கோட்பாட்டைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்திருக்கிறது.

இவ்வாறானதொரு பின்னணியில் முஸ்லிம் பெண்கள் தலையையும், காதையும் மறைக்கக்கூடிய விதமாக அணியும் ஆடை உள்ளடங்கலாக சில விசேட அணிகலன்களை அணிவதற்கான சுதந்திரம் மேற்கூறப்பட்டவாறு அரசியலமைப்பின் 14(1)(ஈ) சரத்தின்கீழ் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே அத்தகைய ஆடை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக்கொண்டு பிரஜை ஒருவரை ஒடுக்குவதானது, பால் மற்றும் மத அடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகாதிருப்பதற்கு அந்நபர் கொண்டிருக்கும் உரிமையை ஒடுக்குவதாகவே அமையும்.

மேலும் அரசியலமைப்புக்கான 27(2)(எச்) சரத்தின் ஊடாக சகலருக்கும் சமத்துவமான கல்வி உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் மாணவரொருவர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி மறுப்பதோ அல்லது அவரது பெறுபேறை இடைநிறுத்திவைப்பதோ மேற்குறிப்பிட்ட உரிமையை மீறுவதாகவே அமையும்.

எனவே இவ்விடயத்தில் நாம் எமது கண்காணிப்பு விசாரணையைத் தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதுடன், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பரிகார நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றனவா எனக் கண்காணிக்கவுள்ளோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.