அவசர சட்டமூலம் கொண்டுவந்து நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி

33 0

ஜனாதிபதி பதவிக்காலம் 5 வருடங்கள் என அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு அரசாங்கம் அவசர சட்டமூலமாக  உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்க முயற்சிக்கிறது.

இதன் மூலம் நாட்டுக்குள் ஏற்படும் குழப்பத்தை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவார் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்காலம் 5வருடங்கள் என உயர் நீதிமன்றம் மூன்று தடவைகள் உறுதிப்படுத்தி இருக்கிறது. அதனால் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை. அமெரிக்காவின் அரசியலமைப்பு 250 வருடங்கள் பழைமைவாய்ந்தது.ஆனால் இந்த அரசியலமைப்பை 350 தடவைகள் அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது.

அந்த வியாக்கியானம் எதுவும் அரசியலமைப்பில் உள்வாங்கியதில்லை. ஏனெனில் அமெரிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானம் அந்த நாட்டின் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

பெரிய பிரித்தானியாவில் அரசியலமைப்பு இல்லை. சம்பிரதாயமும் வழக்கு தீர்ப்புகளுமே அந்த நாட்டின் அரசியலமைப்பு.

எமது நாட்டிலும் ஜனாதிபதியின் பதவிக்காலம்  5வருடங்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அது அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும்.

அதனால் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5வருடங்கள் என  இதற்கு மீண்டும் சட்டமூலம் ஒன்று கொண்டுவர தேவையில்லை. அப்படியாயின் ஏன் 5வருடங்கள் என தெரிவித்து அரசாங்கம் சட்டமூலம் கொண்டுவர வேண்டும்?. என்னை பொறுத்தவரை, அரசாங்கத்துக்கு இந்த சட்டமூலத்தை அரசியலமைப்பின் 122கிழ்  அவசர சட்டமூலமாக கொண்டுவர முடியாது என்றாலும் அதற்கு முயற்சிக்கிறது.

எனவே ஜனாதிபதி பதவிக்காலம் 5 வருடங்கள் என அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டு அரசாங்கம் அவசர சட்டமூலமாக  உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கவே முயற்சிக்கிறது. இது சாத்தியப்படப்போவதில்லை. என்றாலும் ஜனாதிபதி அதற்காக முயற்சிக்கிறார்.

அவ்வாறு இல்லாவிட்டால்  அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை எதற்காக தற்போது அவசரமாக மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி எப்படியாவது இவ்வாறான ஒரு சட்டமூலத்தை அவசர சட்டமூலமாக உயர் நீதிமன்றத்துக்கு அனுப்புவார்.

உயர் நீதிமன்றம் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவிக்கும். இதுதான் இவர்களின் ஒரேநோக்கம். இதன் மூலம் நாட்டுக்குள் பாரிய குழப்பம் ஏற்படும் சாத்தியம் இருக்கிறது. அதனால் உயர் நீதிமன்றம் அவ்வாறு செயற்படும் என நான் நினைக்கமாட்டேன்.

என்றாலும் இதுதொடர்பில் நாட்டுக்குள் குழப்பம் ஏற்படும்போது நிறைவேற்று அதிகாரி என்றவகையில், அந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக ஜனாதிபதிக்கு சில நடவடிக்கைகளை எடுக்க முடியும்.என்னை பொறுத்தவரையில் இதுவே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு. அதனால் அடுத்தவாரம் பாராளுமன்ற அமர்வின்போது,  இந்த சட்டமூலத்துக்கு என்ன நடக்கும் என்பதை எங்களுக்கு பார்த்துக்கொள்ளலாம் என்றார்.