ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து ஆராய்வது காலத்தை வீணடிக்கும் செயற்பாடு

29 0

அரசியலமைப்பின்  83( ஆ) உறுப்புரை ஜனாதிபதியின் பதவி காலத்துக்கு நேரடியாகவோ,மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தாது.ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என உயர்நீதிமன்றம்  வியாக்கியானம் வழங்கியுள்ள நிலையில்  பதவி காலம் குறித்து மீண்டும் சந்தேகத்தை தோற்றுவிப்பது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகும் என  சுதந்திர மக்கள்  சபையின் பிரதிநிதியும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11)  இடம்பெற்ற சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதியின் பதவி காலம்  தொடர்பில்  உயர் நீதிமன்றம்  தெளிவாக வியாக்கியானம் வழங்கியுள்ள நிலையில்  மீண்டும் பதவி காலம் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுகிறது.பதவி காலம் ஐந்து ஆண்டுகளா ? அல்லது ஆறு ஆண்டுகளா ?   என்று மீண்டும் ஆராயப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவி காலம் தொடர்பில் உயர்நீதிமன்றில் வியாக்கியானம் கோரினார்.அவர் அரசியலமைப்பின் 18 ஆம் திருத்தத்துக்கு அமைய ஆறு வருட பதவி காலத்துக்காகவே மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்ற உறுதியாக தர்க்கம் காணப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றம் அவரது பதவி காலம் ஐந்து வருடங்கள் என்று குறிப்பிட்டது.

மைத்திபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னரே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.இந்த திருத்தம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அதன் ஏற்பாடுகள் நாட்டின் அடிப்படை சட்டமாக கருதப்படும் ஆகவே அவரது பதவி காலம் 05 ஆண்டுகள் மாத்திரமே என்று உயர் நீதிமன்றம் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியது.

ஜனாதிபதியின் பதவி காலம்  குறித்து கடந்த திங்கட்கிழமை  உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது. சி.டி. லெனவக என்ற நபர் ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து முறையான தெளிவின்மை காணப்படுவதால் ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்துமாறு வலியுறுத்தி அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசியலமைப்பின் 30 (2) உப பிரிவில் ஜனாதிபதியின்  பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 83(ஆ)பிரிவு ஜனாதிபதியின் பதவி காலத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தாது.இருப்பினும் இந்த உறுப்புரையை திருத்தம் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில்  அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள வரைவினை நிறைவேற்றுவது சாத்தியமற்றது. இந்த வரைவு எதிர்வரும் 15 ஆம் திகதி  வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டால் எதிர்வரும் மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்க வேண்டும்.அதன் பின்னர் இந்த சட்டமூலத்தை  உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த  14 நாட்கள் காலவகாசம் வழங்கப்படும்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை இந்த சட்டமூலம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.இந்த சட்டமூலம் தொடர்பான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் போது  ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்களை தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்திருக்கும்.ஆகவே இந்த சட்டமூலம் காலத்தை வீணடிக்கும் ஒரு செயற்பாடு என்றார்.