சந்தேகநபரை விசாரணை செய்வதை காண்பிக்கும் வீடியோவை பொலிஸார் வெளியிடுவதா?

26 0

அத்துருகிரிய படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் விசாரணை செய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும்  கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

2021ம் ஆண்டு பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட வழிகாட்டல்களிற்கு  முரணானவிதத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொலிஸார் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என பல முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைத்ததை தொடர்ந்து 2021 இல் விசாரணைகளை வீடியோவில் பதிவு செய்து வெளியிடுவதை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த முறையில் விசாரணைகள் இடம்பெறுவது நபர் ஒருவரின் நியாயமான விசாரணைக்கான உரிமையை மீறும் செயல் என தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஒருநபர் குற்றமற்றவர் என்ற அனுமானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் வீடியோக்களை வெளியிடுவது தொழில்சார் தன்மை வாய்ந்த செயல் இல்லை என தெரிவித்துள்ள அவர் இது விசாரணையின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது விசாரணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அம்பிகா சற்குணநாதன் விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் போலியன குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் வேறு ஒரு நபர்மீது  குற்றச்சாட்டுகளை சுமத்தலாம்,என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வீடியோக்களை வெளியிடுவதன்  மூலம் மூன்றாம் நபரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பல கேள்விகளை எழுப்புகின்றது,’ ஏன் இந்த விசாரணை வீடியோவை மாத்திரம் வெளியிட்டனர்? விசாரணை ஏன் இடைநடுவில் நிறுத்தப்பட்டது? இந்த வீடியோவை பொலிஸார் வெளியிட்டதன் நோக்கம் என்ன?இது தொழில்சார் தன்மையுள்ள விசாரணைக்கு பதில் நாடகம் போல தோன்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிசும் இதனை கண்டித்துள்ளார்.

இவ்வாறான வீடியோவை வெளியிடுவது பொலிஸாரின் முற்றிலும் முட்டாள்தனமான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றவிசாரணையை ஒரு தொழில்ரீதியாக குற்றவாளியை நீதிpயின் முன்னிலையில் நடத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் மலிவான விளம்பரத்தை தேடும் நோக்கத்துடன் இதனை முன்னெடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

மையஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகும் இவ்வாறான வீடியோக்கள் விசாரணையின் இறுதி முடிவை மோசமாக பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை சந்தேகநபரின் அடிப்படை உரிமையை மீறும் செயல் என தெரிவித்துள்ள கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளிற்கும் இது முரணாண விடயம் என தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள வழிகாட்டுதல்களிற்கும் இது முரணாணது இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கலாம் என கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது ஒரு ஊடகநாடகம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலிஸார் முதலில் சந்தேகநபரை விசாரணை செய்துவிட்டு பின்னர் ஊடகங்களிற்காக ஒரு நாடகத்தை ஆடியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் விடயங்களை மறக்கின்ற போதெல்லாம் விசாரணையை மேற்கொண்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அவற்றை நினைவுபடுத்துவதை பார்த்தோம் இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்என அவர் தெரிவித்துள்ளார்.