நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் 60 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியுடனும், இலங்கை அரசின் ஒத்துழைப்புடனும் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களுக்கான 60 ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக 2023.12.18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்தை உயர்தர மாணவர்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமுல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, குறித்த மட்டுப்பாட்டை நீக்குவதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம், கல்வி அமைச்சு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் தேசிய வரவ செலவுத்திட்டத் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்து கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நீர்ப்பாசனம் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கருத்தில் கொண்டுள்ளது.