கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை குறித்து பெறப்படும் நிதி: எழுந்துள்ள குற்றச்சாட்டு

31 0

கிளிநொச்சி – கண்டவளை பிரதேசத்துக்கு உட்பட்ட உடுப்பாற்றுக் கண்டல் பகுதியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள 193 விவசாயிகளில் ஒவ்வொரு விவசாயிடமும் ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா பற்றுச் சீட்டுக்களின்றி அறவிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – இரணைமடுகுளத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கைக்கான கூட்டம் மாவட்ட பதில் அரச அதிபர் தலைமையில் ஏற்கனவே நடைபெற்றிருந்தது.

இதன்போது, எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறி உடுப்பாற்றுக்கண்டல் பகுதியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள 193 விவசாயிகளிடமிருந்தும் ஏக்கர் ஒன்றுக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் பெருந்தொகையான நிதி பற்றுச் சீட்டுகள் இன்றி அறவிடப்பட்டுள்ளது.

றித்த நிதியானது வங்கி கணக்கில் வைப்பிலிடப்படாது செலவிடப்பட்டுள்ளது.

 

இதனை விட சிறுபோக செய்கை மேற்கொள்ளும் குறித்த பகுதி விவசாயிகளிடம் இருந்து மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்ட தீர்மானத்தின் படி விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட வாய்க்கால் பராமரிப்பு நிதி வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படாமல் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முறையற்ற விதத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டிலும் குறித்த பிரதேச விவசாயிகளிடமிருந்து பெருந்தொகை நிதி அறவிடப்பட்டமை தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்ட போதும் அரசியல் தலையீடு மற்றும் அதிகாரிகள் மீதான அரசியல் அழுத்தம் காரணமாக அவை மூடி மறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.