அமெரிக்கா காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தமிழர்களிற்கான சுயநிர்ணய உரிமை குறித்த தீர்மானம்

39 0

ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன.

2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர்  அமைப்புகள் அதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பான கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள 150க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்தின் வரலாற்று சூழமைவையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு தீர்வுகாணக்கூடிய அதன் சாத்தியப்பட்டாமையும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளன.

இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடையும் தருணத்தில் இந்த தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நல்லிணக்கம் பற்றி இலங்கை அரசாங்கம் பேசுகின்ற போதிலும் தமிழர் இனப்படுகொலையின் 15 வருட நினைவேந்தல் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவங்கள் நேர்மையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து அரசாங்கம் அரசியல் உறுதிப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை  வெளிப்படுத்தியுள்ளன என  புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இராணுவமயமாக்கல்,நிலஅபகரிப்பு,சித்திரவதைகள் தடுத்துவைத்தல் உட்பட ஏனைய மனித உரிமை மீறல்களிற்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர் எனவும் புலம்பெயர் தமிழர்  அமைப்புகள் தெரிவித்துள்ளன.