ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு: இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

60 0

மாஸ்கோவில் நடைபெற்ற 22-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 22-வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மாஸ்கோ சென்ற பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனதுவீட்டில் சிறப்பு விருந்து அளித்தார்.அப்போது அதிபர் புதின் கூறும்போது, “உங்கள் வாழ்க்கையை இந்திய மக்களுக்காக அர்ப்பணித்துள்ளீர்கள். அதனாலேயே, மக்களின் ஆதரவுடன் 3-வது முறையாக பிரதமர்ஆகி இருக்கிறீர்கள்” என்று பாராட்டினார். இதற்கு பிரதமர் மோடி, “நீங்கள்கூறுவது சரிதான். எனது நாடு, நாட்டு மக்களின் வளர்ச்சி மட்டுமே எனது ஒரே லட்சியம்” என்றார்.

இரு தலைவர்களும் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உக்ரைன் போர்குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பிறகு, போர் வீரர்கள் நினைவிடத்தில் மோடி மரியாதை செலுத்தினார். புதினுடன் சென்று மாஸ்கோவில் உள்ள தேசிய கண்காட்சி மையத்தை பார்வையிட்டார். ரஷ்ய அணுசக்தி மையத்தையும் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர்மாளிகையில் 22-வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு தொடங்கியது. இதில், ரஷ்ய அதிபர் புதினும், இந்தியபிரதமர் மோடியும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ரஷ்யாவின் மாஸ்கோ, டாகஸ்டானில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறேன். தீவிரவாதத்தால் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட வலியை என்னால் உணர முடிகிறது. ஏனென்றால், தீவிரவாத பிரச்சினையை இந்தியா சுமார் 50 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது. அமைதியை ஏற்படுத்த அனைத்து வகையிலும் உதவ இந்தியா தயாராக இருக்கிறது.

போர் மூலம் அமைதியை ஏற்படுத்த முடியாது. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும். நேற்று (8-ம் தேதி) புதினுடன் தனிப்பட்ட முறையில் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. இதன் அடிப்படையில் உக்ரைன்விவகாரத்தில் விரைவில் அமைதி ஏற்படும் என உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு மோடி பேசினார்.

இதை ஆமோதித்த ரஷ்ய அதிபர் புதின், “உக்ரைன் விவகாரத்தில் சுமுகதீர்வை எடுக்க நீங்கள் (மோடி) எடுக்கும் முயற்சிகளை பாராட்டுகிறேன்” என்றார். வரும் அக்டோபரில் ரஷ்யாவின் கசான் நகரில் நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கவும் அவருக்கு அழைப்பு விடுத்தார்.

6 புதிய அணு உலைகள்: இதற்கிடையே, ரஷ்ய அணுசக்தி கழகமான ரோசோடாம் வெளியிட்ட அறிக்கையில், ‘கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும். இந்தியாவில் புதிதாக 6 அணுஉலைகள், குறைந்த சக்தியுள்ள அணுஉலைகள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ரஷ்யாவின் பசிபிக் பிராந்திய துறைமுகங்கள் வாயிலாக வடக்கு கடல் வழித்தடத்தில் இந்தியாவுக்கு எரிபொருள் விநியோகிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் நல்ல வேலை வாங்கிதருவதாக ஆசைகாட்டி, சுமார் 35 இந்தியர்கள் அந்நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்கள்தற்போது ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றியும் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பேரில், ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் அனைவரும் விரைவில் விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதியஅணுஉலைகள், கடல்வழி போக்குவரத்து, விண்வெளி ஆராய்ச்சி, வர்த்தகம் தொடர்பான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயரிய விருது: ரஷ்யாவின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் அண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ கடந்த 1698-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ரஷ்ய மக்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மிகச் சிறந்த உலகத் தலைவர்களுக்கும் இந்த விருதை ரஷ்ய அரசு வழங்குகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் அண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருது அறிவிக்கப்பட்டது. இந்தியா – ரஷ்யா இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்வதை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்படுவதாக ரஷ்ய அரசு அப்போது தெரிவித்தது.

தற்போது அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் அண்ட்ரூ தி அப்போஸ்தலர்’ விருதை வழங்கினார்