பெருந்தோட்டங்களை கிராமங்களாக அடையாளப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்படும்

25 0

பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் வாழும் இடங்களை கிராமங்களாக அடையாளப்படுத்தி வர்த்தமானி அறவித்தலை வெளியிட ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. தோட்ட பகுதிகளை கிராமமாக அறிவித்து காணி உரிமையை பெற்றுக் கொடுப்போம்.பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மலையக மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஜனாதியாக கனவு காணும்  தம்மிக்க பெரேரா 1700 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என  நீர் வழங்கல் மற்றும் பெருந் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி  அமைச்சர்  ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தச்)சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சபைக்கும்,நாட்டு மக்களுக்கும் ஒருசில விடயங்களை தெளிவுப்படுத்த வேண்டும். 1700 ரூபா சம்பள விவகாரம் எந்நிலையில் உள்ளது. என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்காது,அரசாங்கம் நாடகம் ஆடுகிறது என்று  ஒரு சிலர் மக்களை தூண்டிவிடுகிறார்கள்.

சம்பள விவகாரத்தில் எந்நிலையில் உள்ளோம் என்பதை மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.அரசியல் நோக்கத்துடன் ஜனாதிபதியிடம் 1700 ரூபா சம்பள கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை.2021 ஆம் ஆண்டு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுத்தோம்.2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை 1000 ரூபா சம்பளம் நடைமுறையில் இருந்தது.

கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஒவ்வொரு இரண்டாண்டுகளிலும் பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பளம் கிடைக்கப் பெற்றது.2024 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட பெருந்தோட்ட கம்பனிகள் முன்வரவில்லை. பலமுறை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.இருப்பினும் பெருந்தோட்ட கம்பனிகள் குறைந்த சம்பளத்தில் எம் மக்களை வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தன.

இவ்வாறான பின்னணியில் சம்பள நிர்ணய சபை ஊடாக 1700 ரூபா சம்பள அதிகரிப்புக்கு நடவடிக்கை எடுத்தோம்.1000 ரூபாய்க்கு மேலதிகமாக ஒரு சதம் கூட அதிகரிக்க போவதில்லை என்று கம்பனிகள் குறிப்பிடுகின்றன.சம்பள விவகாரத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு சட்டம்,பெருந்தோட்ட அலுவலகங்களில் பணி புரிவோருக்கு பிறிதொரு சட்டம் இதனை ஏற்க முடியாது என்றே குறிப்பிடுகிறோம்.

பெருந்தோட்ட விவகாரத்தில் தனித்து செயற்பட விரும்பவில்லை.அனைவருடன். ஒன்றிணைந்து செயற்படவே எதிர்பார்க்கிறோம். ஆகவே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.பெருந்தோட்ட பகுதிகளில் பாரிய பிரச்சினை காணப்படுகிறது. கொவிட் பெருந்தொற்று தாக்கத்தின் முன்னரான காலப்பகுதியில் பெருந்தோட்ட பகுதியில் வறுமை நிலை 23 சதவீதமாக காணப்பட்டது.தற்போது வறுமை நிலை 56 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

நாள் கூலி முறைமையை நாங்கள் ஏனைய தொழிற் சங்கங்களும் விரும்பவில்லை.நாங்கள் நிரந்தர தீர்வையே எதிர்பார்க்கிறோம்.பெருந்தோட்ட மக்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதாக அரசியல் தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.நாங்களும் இதனையே வலியுறுத்துகிறோம்.1 இலட்சத்து 15 ஆயிரம் தொழிலாளர்களை ஒரே இரவில் சிறுதோட்ட உரிமையாளர்களாக்க முடியாது. குறைந்தப்பட்சம் ஐந்து ஆண்டுகளேனும் செல்லும். இதுவரை மக்களை 1000 ரூபா சம்பளத்தில் வைத்திருக்க முடியாது. நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை தற்காலிக தீர்வாகவே 1700 ரூபா கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.சம்பள நிர்ணய சபை இரண்டு முறை கூடிய போது பெருந்தோட்ட கம்பனிகள் பங்குப்பற்றவில்லை.ஆனால் நீதிமன்றத்தில் 1200 ரூபா வழங்குவதாக குறிப்பிட்டுள்ளதாக பொய்யுரைத்துள்ளார்கள்.பெருந்தோட்ட கம்பனிகள் சூழ்ச்சிகரமான அரசியல் செய்கிறது.

1700 சம்பளத்தை வழங்கினால் தோட்டங்களை நிர்வகிக்க முடியாது .நட்டமடைய வேண்டும் என்று 19 பெருந்தோட்ட கம்பனிகள் தொடர்ந்து குறிப்பிடுகின்றன.நீதிமன்றத்திலும் இதனையே குறிப்பிட்டனர்.அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனம் 1343 மில்லியன் ரூப, எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனம் 1830 மில்லியன் ரூபா,அபுகஸ்தென்ன பெருந்தோட்ட நிறுவனம் 159 மில்லியன் ரூபா,ஹொரனை பெருந்தோட்ட நிறுவனம் 170 மில்லியன் ரூபா,கேகாலை பெருந்தோட்ட நிறுவனம் 689 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் 19 நிறுவனங்கள் இலாபமடைந்துள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரே 1700 ரூபா சம்பளத்தை எதிர்க்கிறார்.ஹேலிஸ் நிறுவனம் உள்ளது.சம்பள அதிகரிப்பை எதிர்க்கும் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா.இவர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து இரண்டு வருடங்களாகுகின்றன.இருப்பினும் ஒருமுறை கூட சபையில் அவர் உரையாற்றவில்லை.ஆனால் ஜனாதிபதியாக ஆசைபடுகிறார்.ஒரு நிறுவனத்தை கூட  முறையாக நிர்வகிக்க முடியாத இவர் நாட்டை நிர்வகிப்பார் என்று ஒருசிலர் கருதுகிறார்கள்.இவரது மூன்று பெருந்தோட்ட நிறுவனங்கள் மாத்திரம் 3000 மில்லியனுக்கும் அதிகமாக இலாபமடைந்துள்ளன.ஆனால் 1700 ரூபா வழங்க முடியாது என்கிறார்கள்

பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கம்பனிகள் நீதிமன்றில் குறிப்பி

குறிப்பிடுகின்றன.இந்தியா,கென்யா ஆகிய நாடுகளின் தொழிலாளர்களை போல் பணியாற்றுவதில்லை என்று ஒப்பிட்டு பொய்யுரைக்கிறார்கள்.உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தால் பெருந்தோட்டத்துறையில்  தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

பெருந்தோட்ட மக்களை தொடர்ந்து துன்புறுத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் வீதிக்கு இறங்குவார்கள்.பெருந்தோட்ட மக்கள் தேயிலை தொழிற்றுறையை மாத்திரம் நம்பியிருக்கவில்லை என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். பெருந்தோட்ட மக்களை ஏலம் விட்டு ஒரு தரப்பினர் பயனடைகிறார்கள்.

காணி உரிமை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி 4000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்தார்.ஒரு குழுவை நியமித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்த போது பெருந்தோட்ட கம்பனிகள் அதற்கு தடையேற்படுத்தின.பெருந்தோட்டங்களில் வாழ்வதற்கு தோட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற தவறான நிலைப்பாட்டை பெருந்தோட்ட கம்பெனிகள் தோற்றுவித்துள்ளன.காணி உரிமை விவகாரத்திலும் பல தடைகள் காணப்படுகின்றன.

பெருந்தோட்ட கம்பனிகளின் கட்டுப்பாட்டில் மக்கள் வாழும் இடங்களை கிராமங்களாக அடையாளப்படுத்தி வர்த்தமானி அறவித்தலை வெளியிட ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.தோட்ட பகுதிகளை கிராமமாக அறிவித்து காணி உரிமையை பெற்றுக் கொடுப்போம்.பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மலையக மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்த நாட்டு மக்கள் அனைவரும் இலங்கையர்கள் என்ற நிலை உருவாக வேண்டும். எனினும் மலையக மக்கள் அவ்வாறு பார்க்கப்படவில்லை.மலையக மக்களின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.அதன் மூலம் 2000 மில்லியன் ரூபா நிதியை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்திற்கு இந்தளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி முன்னேற்றத்துக்கான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த நாம் தீர்மானித்து அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பித்துள்ளோம். இந்திய அரசாங்கம் அதற்காக எமக்கு 30 ஆசிரியர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக நாம் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூறுகின்றோம். மலையகத்திலுள்ள 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காகவே இந்திய ஆசிரியர்கள் அவ்வாறு வருகை தரவுள்ளனர்.

அதே வேளை மலையகப் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு இம்முறை அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளோம்.குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக நாம் இரண்டு வருட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். மலையகப் பெருந்தோட்ட பகுதியிலுள்ள 1197 சிறுவர் பராமரிப்பு நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் காலை உணவு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

நாம் எப்போதுமே சமமானவர்கள் என அரசியல் ரீதியாக தெரிவித்தால் மட்டும் போதாது. அது நம் உணர்வுகளிலும் செயற்பாடுகளிலும் இருக்க வேண்டியது. மலையக மக்கள் இன்னும் முன்னேறவில்லை என்று பலரும் தெரிவிக்கின்றார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்களை முன்னேற விடவில்லை.ஏனைய சமூகத்தோடு ஒப்பிடுகையில் மலையக மக்கள் ஒன்றில் தோட்டத்தில் வேலை செய்வார்கள் அல்லது வீட்டு வேலைகளுக்கு செல்கின்றார்கள். அவ்வாறானால்  எவ்வாறு முன்னேற முடியும்?

சலுகை அரசியலில் ஈடுபடுவதைப் பார்க்கிலும் எமது சிறுவர்களின் பாதுகாப்பு,முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.அந்த வகையில் ஒரு பின் தங்கிய சமூகத்துக்கு மத்தியில் அரசியல் செய்வது தவறு. அந்த வகையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து ஒன்றிணைந்து எம் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்போம் என்றார்.