பணிக்கு சமூகமளிக்காத புகையிரத ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

52 0

நாட்டில் போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமானதாகும் எனவே பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக  பிரகடனப்படுத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால் திடீரென அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்றும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இந்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (09) பதுளை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு இயக்கப்படவிருந்த இரவு அஞ்சல் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் பயணத்தை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வளமை போன்ற சேவையில் ஈடுபடுத்தப்படும். எனவே பணிப்புறக்கணிப்பு காரணமாக புதன்கிழமை (10) அலுவலக புகையிரதங்களை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டால் அந்த பஸ்களை அதிகளவில் ஈடுபடுத்தி ரயில் பருவ கால சீட்டினைப்பயன்படுத்தி இலவச போக்குவரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.