விபத்தில் உயிரிழந்த அருட்தந்தை ஜொனார்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி

49 0

மன்னார்  – மடுமாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை ஜொனார்தன் கூஞ்ஞவின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக இன்று (09.07.2024) மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை கீ. ஜொனார்தன் கூஞ்ஞ, கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.07.2024) இரவு மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அவரின் பூதவுடல் நேற்று (08.07.2024) பிற்பகல் மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து மன்னார் ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரவு 7 மணியளவில் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்றையதினம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் காலை 7 மணியளவில் இரங்கல் திருப்பலி இடம்பெற்றதனை தொடர்ந்து காலை 8.15 மணிக்கு அவரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும், காலை 8.15 மணியிலிருந்து பிற்பகல் 2.45 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக அருட்பணியாளரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, மாலை 5 மணிக்கு பேராலயத்திலிருந்து மன்னார் சேமக்காலைக்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு 5.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.