அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மற்றுமொரு வாகனம் கண்டுபிடிப்பு

42 0
அத்துருகிரிய பகுதியில் நேற்று திங்கட்கிழமை (08) பச்சை குத்தும் நிலையம் ஒன்றில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வேன் ஒன்று புலத்சிங்கள பிரதேசத்தில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாலை  6.15 மணியளவில் ‘119’ பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புலத்சிங்கள, அயகம பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் இந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அயகமவில் இருந்து புலத்சிங்கள பகுதிக்கு வேன் பயணித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

வேனின் முன்புறத்திலும், பின்புறத்திலும் வாகன இலக்க தகடுகள் காணப்படவில்லை எனவும், வாகன வருமான அனுமதிப் பத்திரத்தின் நகல் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் காலை அத்துருகிரிய நகரத்தில் பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழா நடைபெற்றது.

இதன்போது, பிரதம அதிதிகளாக, பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் அவரது மனைவி மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பச்சை குத்தும் நிலையத்திற்குள் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு சென்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே.சுஜீவா, க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

55 வயதான க்ளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா, 38 வயதுடைய நபருமே சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அத்துருகிரிய மற்றும் கொழும்பு 07 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த சுஜீவா மற்றும் ஒரு ஆண் ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் மற்றைய இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிரிரிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் பயணித்த கார் கடுவலை, நவகமுவ கொரதொட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் வேன் ஒன்று புலத்சிங்கள பிரதேசத்தில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.