இரத்தினபுரி பிரதேசத்தில் கொடகவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பாய பகுதியில் போலியாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகன பதிவு சான்றிதழ்கள் மற்றும் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (8) கைது செய்யப்பட்டுள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கொடகவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகன பதிவு சான்றிதழ்கள் 7 மற்றும் 3 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.