சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் – கனகசபை ரவீந்திரன்

31 0
சீன அரசின் பொருத்து வீட்டு திட்டம் வடக்கிழக்கு மீனவர்களுக்கு வேண்டாம் என யாழ். சுழிபுரம்  அலைமகள் கடற்றொழிலாளர் கிராமிய கூட்டுறவு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் கனகசபை ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். சுழிபுரத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்பொழுது சீன வீட்டுத்திட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களாக நாம் ஆராய்ந்து வருகின்றோம்.

சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருத்து வீட்டு திட்டம் எமக்கு உகந்தது அல்ல நாங்கள் கடற்கரையினை அண்டிதான் வாழ்ந்து வருகின்றோம். சூறாவளி  காற்றினால் இந்த வீடு அழிய கூடும் இயற்கை அனர்தங்களுங்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.ஆகவே எங்களுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீட்டுதிட்டங்களை முற்றிலும் நிராகரிக்கின்றோம்.

எமது கடற்றொழிலாளர்கள் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளோம். தொடர்ந்து இழுவை மடியாலும் பாதிக்கபட்டுள்ளோம். பொது மக்களுக்கு பல நெருக்கடியான சூழலிலும்  மீனவ தொழிலை ஜீவனோபாயமாக  மேற்கொண்டுவருகின்றோம். எமக்கு நிரந்தரமான வீட்டுத்திட்டம் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் வழங்கவேண்டும்.உண்மையில் எமக்கு சீன அரசு தரமான பொருட்களையும் நல்ல திட்டங்களையும் வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசு உதவி வழங்குகின்றது என சொல்லுகின்றனர். இன்றுவரை எமது அலைமகள் கடற்றொழிலாளர்களுக்கு எந்த உதவியும் சீன அரசினால் கிடைக்கப்பெறவில்லை. அரிசி தருவதாக கூறினார்கள் அதிலும் தர பிரச்சினை, அரசியல் ரீதியாக தங்களுடைய காரியாலயங்களில் வைத்து அரிசியினை வழங்கினார்கள். அரசியல் வாதிகள் பொதுமக்களை கவனிக்க வேண்டும் எனவே என அவர் மேலும் தெரிவித்தார்.