தமிழக மக்கள் பாஜகவை மட்டுமல்ல, அதன் நிழலாக வரும் கட்சிகளையும் தோற்கடிப்பர் என்று கவிஞர் காசி முத்துமாணிக்கம் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, வீரமூர் பகுதியில் வாக்கு சேகரித்த கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசியது, “கடந்த முறை மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைத்த பாஜக, இந்த மக்களவைத் தேர்தலில் 240 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்திருக்கிறது. ஜான் ஏறி முழம் இறங்கிய கட்சியாக பாஜக உள்ளது.
தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக வடிகட்டிய பொய்யை கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதிமுகவிலிருந்து வந்த ஓ.பி.எஸ்., தினகரன், நயினார் நாகேந்திரன், ஏ.சி.சண்முகம் ஆகியோர் வாக்குகளைக் கூட்டி தனக்கு கூடியதாக அவர் கூறுகிறார். பாஜகவுக்கு வாக்கு கூடவில்லை. வாக்கு பல இடங்களில் சறுக்கியுள்ளதை மோடி உணர்வாரா? 1999 ம் ஆண்டு 5 மக்களவை உறுப்பினர்களை பெற்ற பாஜகவுக்கு இன்று தமிழகத்தில் ஒரு எம்.பி.கூட இல்லை.
சில தனி நபர்கள் ஒரு தேர்தலில் வாக்கு வாங்குவது நிலையானது அல்ல. 2018 ம் ஆண்டில் ஆர்.கே.நகர் தொகுதியில் பலரையும் தோற்கடித்தார் டி.டி.வி.தினகரன். ஆனால், அவர் பொதுச் செயலாளராக உள்ள அமமுக அடுத்த தேர்தல்களில் வைப்புத்தொகை இழந்து நிற்கிறது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உள்ளிட்ட சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியவர் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி. தற்போதைய மக்களவைத் தேர்தலில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த தருமபுரி மணி, வேலூர் கதிர்ஆனந்த், சேலம் டி.என்.செல்வகணபதி, அரக்கோணம் எஸ்.ஜெகத்ரட்சகன், ஆரணி தரணிவேந்தன் என 5 பேரை மக்களவை உறுப்பினர்களாக்கியது திமுகதான். அமைச்சரவையில் கூட வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மதுவிலக்கு கொள்கையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது தமிழக அரசு. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியை வழங்கியது மட்டுமல்லாமல், பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கும் உரிய ஏற்பாடுகளை செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் நகரில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மட்டுமே நிவாரண நிதியை வழங்குவது அறிவித்திருக்கிறது அந்த மாநில அரசு. மேலும் இதுவரை குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை. தமிழக மக்கள் பாஜகவை மட்டுமல்ல, பாஜகவின் நிழலாக வருபவர்களையும் தோற்கடிப்பர். அனைத்து சாதி மக்களலால் ஏற்றுக் கொள்ளப்படட திமுக வேட்பாளர் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.
இப்பிரசாரத்தில் சென்னை மேற்கு மாவட்ட பகுதிச் செயலாளர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் போஸ் வெங்கட், வட்டச் செயலர்கள் ஜெ. விஜயகுமார், ஐசிஎஃப் சங்கர், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.