இலங்கையில் மருத்துவ ஆலோசனைகளுக்காக உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ள அப்பலோ வைத்தியசாலை

36 0

இந்தியாவின் பாரிய வைத்திய சேவையை வழங்கும் அப்பலோ வைத்தியசாலை, இலங்கையின் செரண்டிப் வைத்தியசாலை குழுமத்துடன் இணைந்து சுகாதார மருத்துவ சேவைகளுக்கான உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய 1305 என்ற இலக்கத்துக்கு அழைத்து சகல விதமான மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (05) கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதிகளாக சிவில் விமான சேவைகள் மற்றும் கப்பற் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அப்பலோ வைத்தியசாலையின் மருத்துவ சேவைகளுக்கான பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கே.வெங்கடாசகம், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த உதவி எண் இலங்கை மக்களுக்கு சிறந்த சுகாதார மருத்துவ சேவைப் பெற்றுக் கொள்ள உதவும் என்று குறிப்பிட்டார். அத்தோடு இலங்கை – இந்தியாவுக்கிடையிலான உறவுகளை மருத்துவ துறையில் மேலும் மேம்படுத்தும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.