பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை அடுத்து சர்வதேச நாடுகளோ, அமைப்புக்களோ நிதியுதவி வழங்காததன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை நிர்மாணம் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க இயலவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜப்பானின் உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கடன்களை மீள்செலுத்த முடியாத நிலை உள்ளடங்கலாக நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான பல தசாப்த காலமாக இலங்கை வரவு -செலவுத்திட்டப் பற்றாக்குறையையும், வர்த்தகப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டுவருகின்றது. அதன் நீட்சியாகக் கடந்த சில வருடங்களாக செலவினங்களை ஈடுசெய்வதற்குப் போதுமான வருமானம் இலங்கையிடம் இருக்கவில்லை. குறிப்பாக அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி, ஏனைய உதவிக் கொடுப்பனவுகள் என்பன உள்ளிட்ட சகல செலவுகளுக்கும் சுமார் 4.4 ட்ரில்லியன் ரூபா செலவிடப்பட்ட அதேவேளை, அப்போது அரசின் வருமானம் 3 ட்ரில்லியன் ரூபாவாகவே காணப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே 69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஜனாதிபதியாகத் தெரிவான கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஆலோசனையை சர்வதேச அங்கீகாரமுடைய கட்டமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை அமைச்சரவையின் ஊடாக முன்னெடுத்தார். அதன் பிரகாரமே க்ளிஃபோர்ட் சான்ஸ் மற்றும் லிஸார்ட் ஆகிய நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய தேவை ஏற்பட்டபோது, அதுகுறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன. அதன் காரணமாக நாணய நிதியத்தை நாடு செயன்முறை தாமதமடைந்தது. அதனையடுத்து நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எழுச்சி தோற்றம் பெற்று, பேரழிவு இடம்பெற்றதன் பின்னர், சவால் மிகுந்ததொரு தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்வந்தார். அவரது தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டியதன் ஊடாக, தற்போது நாடு மீண்டும் மூச்சுவிட ஆரம்பித்திருக்கின்றது.
இது இவ்வாறிருக்க நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்த காலப்பகுதியில் சர்வதேச நாடுகளோ அல்லது அமைப்புக்களோ எமக்கு எவ்வித நிதியுதவியையும் வழங்கவில்லை. அதன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க இயலவில்லை. இருப்பினும் தற்போது ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கையில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்டுவதில் விசேட ஒத்துழைப்பை வழங்கிய ஜப்பானின் உதவிகள் கிட்டும் பட்சத்தில், இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இருப்பினும் அதற்கு நாம் தற்போதைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். அவற்றை இடைநிறுத்தும் பட்சத்தில் மீண்டும் பின்னடைவு நிலைக்குச் சென்றுவிடுவோம் என்றார்.