யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முட்டுக்கட்டையா ?

42 0

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையை மேம்படுத்த அயராது உழைக்கும் தன்னை வைத்தியசாலை பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அகற்ற சில வைத்தியர்கள் முயற்சிப்பதாகவும் , அதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் துணை போவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர்  அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திற்கு நான் வர கூடாது என்பதற்காக பலதரப்பின் ஊடாக வடமாகாண சுகாதார திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றினையும் மீறி நான் சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக கடமையேற்றுள்ளேன்.

அவர்கள் என்னை இங்கே வர விடாது தடுத்தமை , நிர்வாக தகுதியற்ற வைத்தியர் ஒருவரை எனது பதவியில் இருந்தவே முயற்சித்தனர். ஆனால் அவர் நேர்முக தேர்வில் தெரிவாகவில்லை. நான் தெரிவாகி கடமையேற்றுள்ளேன்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக இயங்காது இருந்த சிகிச்சை சில பிரிவுகளை மீள இயங்க வைத்துள்ளேன். ஏனைய சிகிச்சைகளையும் வைத்தியசாலையில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இந்த வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 20 நாட்களுக்கு மேலாக அயராது உழைத்து வருகிறேன்.

அந்நிலையில் என்னை பதவியில் இருந்து விலக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சில வைத்தியர்கள் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் வேலை செய்யும் சில வைத்தியர்கள் அதற்கு உடந்தையாக இருக்கின்றார்கள். ஏனெனில் , விபத்து , பிள்ளைப்பேறு உள்ளிட்ட சத்திர சிகிச்சைகளுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி விட்டு , அவர்கள் இதுவரை காலமும் இருந்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பிரிவுகள் மீள திறக்கப்பட்டு அவற்றை இயங்கு நிலைக்கு கொண்டு வரும் போது, அவர்களுக்கு வேலை அதிகமாகும் என்பதால் அவற்றை அவர்கள் விரும்பவில்லை. அத்தோடு அவர்கள் தனியார் வைத்தியசாலைக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படும் எனவும் அச்சப்படுகின்றனர்.

வைத்தியசாலையின் மருந்து களஞ்சியம் சீரான முறையில் இல்லை. பல மருந்துகள் நிலத்திலையே வைக்கப்பட்டுள்ளன. ஒழுங்கான குளிரூட்டல் வசதிகள் இன்றி , குறைபாடுகளுடன் மருந்து களஞ்சிய சாலைகளில் மருந்துகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் வடமாகாண சுகாதார திணைக்களம் முன்னெடுக்கவில்லை. இவை எல்லாம் தெரிந்தும் அவர்கள் பல ஆண்டுகாலமாக நடவடிக்கை எடுக்காது இருக்கின்றார்கள்.

அதுமட்டுமின்றி மின் தடை நேரங்களில் இயங்க கூடிய வகையில் ஜெனரேட்டர் வசதிகள் இதுவரையில் வைத்தியசாலையில் இல்லாத நிலைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஊழல்கள் நிறைந்து இருக்கலாம் என சந்தேகங்கள் உள்ளன.

வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடத்தினை மீள இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் முன்னெடுத்த வேளை மின் தடை ஏற்பட்டால் , ஜெனரேட்டர் வசதிகள் இல்லை. அதனால் அவற்றை இயங்க வைக்க வேண்டாம் என எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.

சத்திர சிகிச்சை கூடத்தினை நிர்மாணிக்கும் போது , அதற்கு ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட்ட வேண்டும் என தெரிந்திருக்க தானே வேண்டும். அவ்வாறு இல்லமல் ஒழுங்கான திட்டமிடல்  வரைவுகள் இன்றி நிர்மாணித்த பின்னர் , ஏதோ காரணங்களை கூறி அவற்றை இயங்க விடாது பல வருட காலமாக தடுத்து வைத்துள்ளார்கள். ஜெனரேட்டர் இல்லை என்றால் , அவற்றை பெற்றுக்கொள்வதற்கு இதுவரையில் எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாது. தொடர்ந்து சத்திர சிகிச்சை கூடத்தை மூடி வைத்துள்ளார்கள்

பொறுப்பான நிர்வாகத்தில் உள்ளவர்கள் இங்குள்ள அரசியல்வாதிகளையும் பிழையாக வழிநடத்தி செல்கின்றனர். அதனாலையே அபிவிருத்திகள் தடைபடுகின்றன

பின்னர் , தெற்கில் உள்ள சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கவில்லை என அரசியல் செய்கின்றனர்.

சாவகச்சேரி வைத்தியசாலை உடற்கூற்று பரிசோதனை செய்யாது ,இதுவரையில் சடலங்களை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு உடற்கூற்று பரிசோதனைகளை முன்னெடுக்க காலதாமதமாகும். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய் வரையில் உழைத்துக்கொள்கின்றனர்.

சத்திர சிகிச்சை கூடத்தினை நாளைய தினம் வெள்ளிக்கிழமை இயங்கு நிலைக்கு கொண்டு வந்து, சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு (சிசேரியன்) வசதிகள் செய்து வரும் போது அவற்றினை குழப்புவதற்கு சில வைத்தியர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட வேற குற்றச்சாட்டுக்கள் இருந்தால் , அதனை வெளிப்படையாக கூறி என்னை பதவியை விட்டு விலக்கலாம். அதனை விடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக அயராது உழைக்கும் என்னை பதவியை விட்டு துரத்த முனைகிறார்கள் என மேலும் தெரிவித்தார்.

அதேவேளை சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிகள் , கிளினிக் செல்வோர் படும் அவஸ்தைகள், மின் தடை நேரங்களில் ஜெனரேட்டர் வசதிகள் இல்லாதமை  என பல காலமாக பலரும் விசனம் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.