இரத்தினபுரி பகுதியில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது!

29 0

இரத்தினபுரி பகுதியில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளை திருடிய இருவரை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28,29 வயதுடைய பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த இராணுவத்தில் இருந்து இடைநடுவில் நின்றவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சென்ற முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது சாரதி அனுமதிப்பத்திரம் இன்றியும் அவர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான தேசிய அடையாள அட்டை, காப்புறுதி அட்டை, வாகன வருமான வரி பத்திரம் ஆகியவை இன்றி குறித்த முச்சக்கர வண்டியை செலுத்தியமையினால் சந்தேகம் கொண்ட ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் முச்சக்கர வண்டியையும் முச்சக்கர வண்டியில் சென்றவர்களையும் ஹிங்குருகடுவ பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது இரத்தினபுரி கல்லெல்ல எனும் பகுதியில் திருடப்பட்ட முச்சக்கர வண்டி என தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸ் நிலையத்திலும் முச்சக்கர வண்டி காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறியகிடைத்துள்ளது.

அதனைத்தொடர்ந்து வேவல்வத்தை பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திய ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முச்சக்கர வண்டி திருடப்படும் போது பதிவான சிசிரிவி காணொளியை பெற்றுக் கொண்டு சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த காணொளியில் இரு சந்தேக நபர்களில் ஒருவர் முச்சக்கர வண்டியை செலுத்தி செல்கையில் முச்சக்கர வண்டிக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் மற்றைய சந்தேக நபரும்  வந்துள்ளார்.

பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் யாருடையது என விசாரித்த போது குறித்த மோட்டார் சைக்கிள் களவான பகுதியில் திருடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இதன்போது வெவல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்பினை ஏற்படுத்திய ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த உந்துருளி இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடம் ஒன்றுக்கு பினன்புறமாக இருப்பதாக வெவல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் வேவல்வத்தை பொலிஸாரினால்  மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இருப்பினும் போதைப்பொருள், திருட்டு,   மருந்தகம் உடைப்பு ஆகிய 14 குற்றச்  செயல்களுடன் இரு சந்தேக நபர்களும் தொடர்புடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரையும் பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தி பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் ஆணை பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டார தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை ஹிங்குருகடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.