பசறை கொட்டமுதுன பகுதியில் ஆசிரியை ஒருவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை, கண்ணில் மிளகாய்த்தூள் தூவி அறுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரை இன்று (03) காலை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் புத்தலை பெல்வத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (02) மாலை பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் மறைந்திருந்த நபர் ஒருவர் அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஆசிரியையின் கண்ணுக்கு மிளகாய்த்தூள் தூவிவிட்டு, கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், ஊர் மக்களும் பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை காட்டுப்பகுதியில் தேடிய போதிலும், சந்தேக நபரை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் இன்று அதிகாலை காட்டுக்குள் பதுங்கியிருந்த சந்தேக நபர் வீதிக்கு வந்து பேருந்தில் ஏற முற்பட்டபோது மறைந்திருந்த ஊர் மக்களும் பொலிஸாரும் சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தான் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை சந்தேக நபர் அறுத்துக்கொண்டு ஓடுகையில், அது தங்கச் சங்கிலி அல்ல; அது பித்தளை என ஆசிரியை சந்தேக நபரிடம் கூறியதாக, அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டு வருவதுடன், சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.