2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரையான ஒரு வருடகாலத்தில் இலங்கை உள்ளடங்கலாக பல்வேறு நாடுகளில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையைப் பாதிக்கக்கூடிய வகையிலும், அதனை மட்டுப்படுத்தக்கூடிய விதத்திலும் சட்டங்களும், வழிகாட்டல்களும் உருவாக்கப்பட்டிருப்பதாக அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் அமர்வுகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
அதன்படி இக்கூட்டத்தொடரில் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியலெற்றொஸி வோலினால் உலகளாவிய ரீதியில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறைகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய 21 பக்க அறிக்கை கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது.
உலகளாவிய ரீதியில் சிவில் சமூக இடைவெளி மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களையும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களையும் தடுப்பதற்கு அவசியமான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சகல தரப்பினரையும் ஒன்றிணையுமாறு க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல் அவ்வறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார்.
அதேபோன்று சர்வதேச மற்றும் பிராந்திய மனித உரிமைகள் சட்டங்களின் கீழும், பெரும்பாலான நாடுகளின் அரசியலமைப்புக்களின் ஊடாகவும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமை பாதுகாக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வுரிமையானது ஜனநாயகத்தின் முக்கிய கூறாகவும், சிவில், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை வலுப்படுத்துவதற்கான உந்துசக்தியாகவும் திகழ்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரையான 12 மாதகாலப்பகுதியில் அங்கோலா, பொஸ்னியா, ஹேர்ஸெகோவினா, சீனா, கிர்கிஸ்தான், நிகரகுவா, ரஷ்யா, இலங்கை, சுவீடன், வெனிசூலா மற்றும் சிம்பாவே ஆகிய நாடுகளில் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமையை பாதிக்கக்கூடிய வகையிலும், அதனை மட்டுப்படுத்தக்கூடிய விதத்திலும் முன்மொழியப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் தொடர்பில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ 26 அறிக்கைகள் மற்றும் கடிதங்களை வெளியிட்டிருப்பதாகவும் விசேட அறிக்கையாளர் க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல் குறிப்பிட்டுள்ளார்.
‘உலகளாவிய ரீதியில் அநேக நாடுகள் ஒன்றுகூடுவதற்கான உரிமையை மட்டுப்படுத்தக்கூடிய சட்ட உருவாக்கங்களையும், வரையறை விதிப்புக்களையும் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய மட்டுப்பாடுகள் அதற்குரிய பிரத்தியேக சட்டங்கள் வடிவிலோ அல்லது குற்றவியல் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் உள்ளடங்கலாக நடைமுறையில் உள்ள சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மூலமோ விதிக்கப்படுகின்றன’ என தனது விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள க்ளெமென்ற் நியலெற்றொஸி வோல், உலகளாவிய ரீதியில் அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான உரிமையை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு அரசுகளும், ஏனைய தொடர்புடைய தரப்பினரும் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
குறிப்பாக சிவில் இடைவெளி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதானது தற்கால சவால்களைக் கையாள்வதில் சிவில் சமூகத்தின் வகிபாகத்தை மேம்படுத்துவதற்கு இன்றியமையாததாகும் எனவும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் உலகநாடுகளின் அரசாங்கங்கள் முன்னெடுக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.