தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு !

29 0

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ள போதிலும், தேர்தல் சட்டம் நடைமுறையிலேயே உள்ளது. எனவே குறித்த காலப்பகுதியில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகளை பிரசித்தப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளையோ அதற்காக பொது சொத்துக்களைப் பயன்படுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளமையினாலும், இதுவரையிலும் அந்த தேர்தல் நடத்தப்படாமையினாலும் அரசியலமைப்பின் 104ஆவது உறுப்புரையின் பிரகாரம் தேர்தல் சட்டம் இன்னும் நடைமுறையிலுள்ளது. அதே போன்று உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் எந்தவொரு அரசியல் கட்சியையும், குழுவையும், வேட்பாளரையும் பிரசித்தப்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது என்பதோடு அதற்காக எந்தவொரு பொது சொத்துக்களும் பயன்படுத்தப்படக் கூடாது.

அரசியலமைப்பின் 104ஆ.(4) அ உபபிரிவிற்கமைய சகல அரச நிறுவனங்களினதும் பிரதானிகளுக்கு அறியத்தருவதோடு, 2023.01.01 அன்று வெளியிடப்பட்ட 2313 32 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பொது சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும் மற்றும் தேர்தல் இடம்பெறும் காலத்தில் அதிகாரிகள், ஊழியர்களை சேவைக்கு இணைத்துக் கொள்ளல், பதவி உயர்வு வழங்குதல், இடமாற்றம் செய்தல் என்பவற்றை மட்டுப்படுத்துவது தொடர்பில் 2023.01.05ஆம் திகதி வெளியிடப்பட்ட 20ஆம் இலக்க சுற்றுநிரூபத்தில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய இந்த காலப்பகுதிக்குள் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களை பிரசாரப்படுத்தும் வகையிலோ அல்லது இழிவுபடுத்தும் வகையிலோ செயற்படுதல் குறிப்பாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களை அவற்றுக்காகப் பயன்படுத்துதல் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கமையவும், தேர்தல் சட்டம் மற்றும் சுற்றுநிரூபத்தை மீறும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

உத்தேச தேர்தலானது சுதந்திரமானதும், நியாயமானதுமாக நடத்தப்பட வேண்டும். எனவே அதற்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் சுற்று நிரூபத்துக்கமைய செயற்படுமாறு சகல தரப்பினரிடமும் தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொள்கின்றது.