ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்படும் மக்கள்

29 0

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயற்பாடு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

காணிப் பகுதியில் கொடுக்கப்படும் ஆவணங்கள் அடிக்கடி காணாமல் போவதாக கூறி மீண்டும் ஆவணங்களை பெற்று வருமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் காணிப்பகுதி உத்தியோகத்தர்களின் அக்கறையற்ற செயல்பாட்டினால் இது நிகழ்கின்றதா அல்லது அவர்கள் வேண்டுமென்றே ஆவணங்களை காணாமல் செய்து விட்டு மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகின்றனரா என கேள்வியெழுப்பும் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.

முத்தையன்கட்டைச் சேர்ந்த ஒருவர் காணி ஆவணம் ஒன்றில் பெயர் மாற்றத்தை செய்வதற்காக காணிப்பகுதியினரால் கோரப்பட்ட ஆவணங்களை வழங்கியிருந்தார்.

 

பத்தாண்டுகளாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு இது தொடர்பில் சென்று வரும் பாதிக்கப்பட்ட அந்த நபர் மூன்று தடவைக்கும் மேலாக ஆவணங்களை காணவில்லை என்றும் மீண்டும் கொண்டு வந்து தருமாறும் சொல்லப்படவே அவ்வாறே மீண்டும் ஆவணங்களை தயார் செய்து கொண்டு சென்றுள்ளார்.

பரம்பரையாக ஆட்சியில் இருப்பதும் பராமரித்து வருவதுமான ஒரு காணியின் ஆவணங்களில் உரிமை மாற்றத்தினை உறுதி செய்து கொள்ளும் ஒரு முயற்சியாகவே அவரது கோரிக்கை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அவர்களது கிரமத்திற்கு நான்கு கிராம் சேவகர்கள் இடமாற்றலாகி கடமை நிமித்தம் வந்து சென்றுள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.