பெண்களுக்கான ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

30 0

தமிழகத்தில் பெண்களுக்கான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து கருங்காலிப்பட்டு, காணை, குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லட்சுமணன் எம்எல்ஏ ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரத்தில் பேசியதாவது: 3 ஆண்டுகளில் பல சாதனைத் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்களுக்கான ஆட்சியை நடத்தி கொண்டிருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் முதல் கையெழுத்தாக மகளிர் இலவச பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 உதவித்தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தினார்.

உயர் கல்வி செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகஸ்ட் முதல் செயல்ப டுத்த உள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 18.50 லட்சம் மாணவ- மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இந்தியாவுக்கு வழிகாட்டியாக உயர்கல்விதுறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிச்சாரத்தின்போது ஒன்றிய செயலாளர் கல்பட்டுராஜா, விஸ்வநாதன், விசிக மாவட்ட செயலாளர் பெரியார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.