நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கப்பல் திருவிழாவின் போது , இளைஞன் ஒருவரை வாளால் வெட்டி படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற கப்பல் திருவிழாவின் போது, இளைஞன் ஒருவர் மீது மற்றுமொரு இளைஞன் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு , சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் தாக்குதலாளி கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் , ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.