முல்லைத்தீவு மாவட்டத்தில் வெற்றியளித்த கொக்கோ பயிர்ச்செய்கை

46 0

வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கோ பயிர்ச்செய்கை வெற்றியளித்துள்ளதன் மூலம் பல்வேறு வகையான பெறுமதி சேர் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையை பொறுத்தவரையில் கொக்கோ பயிர்ச் செய்கையானது இடை, ஈர வலயங்களில் அதிகளவாக செய்கையிடப்பட்டு வருகிறது.

இருப்பினும், உலர் வலயத்திலும் இப்பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கொக்கொ செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு முயற்சியாக டார்க் சொக்லேட் செய்யும் பரீட்சார்த்த முயற்சி வெற்றியளித்துள்ளது.

மாவட்ட விவசாய பயிற்சி நிலைய பண்னை முகாமையாளர் துமிலன் வழிகாட்டலுடனும், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் ஆலோசனையுடனும், ஒட்டுசுட்டான் விவசாய போதனாசிரியர் அனோதினி சிவனேஸ்வரன் கொக்கோ பயிர் மூலம் டார்க் சொக்லேட் செய்யும் முறை பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார்.

கொக்கோவில் இருந்து பல்வேறு வகையான பெறுமதி சேர் உற்பத்திகளை மேற்கொள்வதுடன் கொக்கோவில் அதிகளவு இலிப்பிட்டு, புரதம், மாப்பொருள், நார்பொருள். அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் என்பனவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொக்கோ பயிர்ச் செய்கையை முல்லைத்தீவு மாவட்டம் உட்பட வட மாகாணத்தில் விஸ்தரிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.