இலங்கை அரச பயங்கரவாதத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் மாணவர்கள் கிளர்ந்தெழுந்த போது அவர்களில் ஒரு முன்னோடியாக நின்று செயற்பட்டு, மாணவர்களை ஒன்றிணைத்து தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன்னை ஈகம் செய்த முதற் தற்கொடையாளன் பொன் சிவகுமாரன் அவர்களின் 50வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் மாணவர் எழுச்சி நாள் நினைவுகூரலும் சுவிஸ் நாட்டின் ஆரவ் மாநிலத்தில் 23.06.2024 (ஞாயிறு) உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்தினால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வில் தமிழர் மரபிற்கு இணங்க முறையே பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி ஈகைச்சுடரேற்றல், பொன் சிவகுமாரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது . அதனை தொடர்ந்து மலர்,சுடர் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
தமிழீழத் தாயக விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாணவர் எழுச்சி நாள்
நிகழ்வில் பெருமளவிலான இளையவர்கள் பங்கெடுத்திருந்தனர். காணிக்கை நிகழ்வுகளாக எழுச்சிப்பாடல்கள், எழுச்சிநடனங்கள், காலத்தின் தேவைக்கேற்ப இளையவர்களின் பணி சார்ந்த தமிழ், வேற்றுமொழி உரை என்பன இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து.