எந்நேரத்திலும் எத்தேர்தலுக்கும் நாங்கள் தயார்!

35 0

ஐக்கிய மக்கள் சக்தி பொது மக்களுடன் இருப்பதால் தேர்தல் நடத்தும் நேரம் எமக்கு முக்கியமில்லை. எந்த தேர்தலுக்கும், எந்த சந்தர்ப்பத்திலும் தயார். ஐக்கிய மக்கள் சக்தியை விட்டுவிட்டு எவரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய மாட்டார்கள். ஜனாதிபதிக்கு அந்த முயற்சி ஒரு கனவே. ஜனாதிபதியோ அல்லது வேறு யாரோ என்ன சொன்னாலும், ஐக்கிய மக்கள் சக்தி 220 இலட்சம் மக்களுக்குமான தமது சேவைகளை முன்னெடுத்து வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன், நாட்டை ஏமாற்றுவதற்கும், நாட்டு மக்களுக்கு பொய்யுரைப்பதற்குமே ஜனாதிபதி நாளை (02) பாராளுமன்றத்தை கூட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படும். எமது ஆட்சியின் போது இங்கு எட்டப்படும் இணக்கப்பாடு மக்களை மையமாகக் கொண்ட, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காத மனிதாபிமான முற்போக்கான இணக்கப்பாடாக அமையும். இது சாதாரண மக்களை ஒடுக்கும் இணக்கப்பாடாக அமையாது. மக்களை வெற்றிபெறச் செய்யும் உடன்பாடாக அமையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடே வங்குரோத்தடைந்துள்ள நேரத்தில், குறிப்பிட்ட சிறிய தரப்பினரே வங்குரோத்தான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்கள் என்பன வெளிப்படத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உயரிய பட்சமாக பேணியே எவ்வேளையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயலாமையோடு வெறும் வாய் சொல்லால் வீராப்பு பேசி வரும் தரப்பினரே இந்த வேலைத்திட்டங்களை கண்டு விமர்சித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நேற்று (30) கண்டிக்கு விஜயம் செய்து, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்வத்து பீட மகாநாயக்க வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதன் பின்னர், அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரையும் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஆற்றிவரும் சேவைகள் தொடர்பாக மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களைத் தெளிவூட்டும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சு, பிரபஞ்சம் திறன் வகுப்பறைகள் மற்றும் பிரபஞ்சம் பாடசாலை பஸ் வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர்களைத் தெளிவூட்டினார்.

அதேபோன்று, சசுனட அருண வேலைத்திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டு ஸ்தலங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் சமய ரீதியான செயற்பாடுகள் குறித்தும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பான அனைத்து வரவு செலவு அறிக்கைகள் மற்றும் விரிவான தகவல்கள் அடங்கிய ஆவணம் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்கர்களுக்கு இதன் போது கையளிக்கப்பட்டது.