நாட்டின் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ள 3 நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது குழந்தையும் மற்றுமொரு நபரும் உயிரிழந்துள்ளதுடன் 14 வயது மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் நேற்று (29) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடக்கு படகொட பிரதேசத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் உள்ள நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற சிறு குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
கொழும்பு 09 ,தெமட்டகொட பகுதியில் வசித்து வந்த 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மேலும் பல குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் நீந்திய போது குழந்தை நீரில் மூழ்கியுள்ளது.
பின்னர் குழந்தையின் தந்தையால் ஜாஎல பிரதேச வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மாங்குளம், இரணைமடு நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற 05 மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மாணவன் திருமுருகண்டி, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலான பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் அலையில் சிக்கி காணாமல் போயிருந்தார்.
காணாமல் போனவரின் சடலம் நேற்று இரவு வெலிகம கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ரம்பொட பிரதேசத்தில் வசித்து வந்த 56 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.