டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான கொள்முதலில் வெளிப்படை தன்மையில்லை: தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு

45 0

டாஸ்மாக் மதுபான கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று இந்திய தணிக்கை தலைவர் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2021-2022-ம் நிதி ஆண்டில் வணிக வரிகள், பதிவுத்துறை மற்றும் உள்துறை ஆகியவற்றின் வரவு – செலவினங்கள் குறித்த இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கையில் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மாநில விற்பனை கழகம் (டாஸ்மாக்) மது உற்பத்தியாளர்களிடமிருந்து மது வகைகளை கொள்முதல் செய்து சில்லறை கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது உற்பத்தியாளர்களிடமிருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கண்டறியப்பட்டது. இதனால் ஒருசில உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு கொள்முதல் ஆணை குறைந்து அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட மதுபானங்களை டாஸ்மாக், தனது சொந்த செலவில் சில்லறை கடைகளுக்கு கொண்டு செல்கிறது. . சரக்கு போக்குவரத்து ஏல ஆவணங்களை சோதனை செய்ததில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடந்திருப்பது தெரியவந்தன.

தமிழக அரசு மின்னணு ஏலவிண்ணப்ப முறையை கடந்த1.1.2008 அன்று அறிமுகப்படுத்தியது. ஏல முறை வெளிப்படையாகவும், போட்டி நிறைந்ததாகவும் அமையவே மின்னணு ஏல முறையை திட்டமிட்டது. ஆனால் ஆவணங்களை பரிசோதித்ததில், அதே நிறுவனங்கள் ஏலத்தில் மீண்டும் மீண்டும் பங்கேற்றுள்ளன.

ஒரே நிறுவனம் அல்லது ஒரே நபருக்கு 10 ஆண்டு காலமாக சரக்கு போக்குவரத்து குத்தகை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில ஏலதாரர்களே எல்லா குத்தகைகளிலும் மீண்டும் மீண்டும் பங்குபெற்றதையும் அறிய முடிகிறது. எனவே ஏலமுறை வெளிப்படையாக இல்லாமல் இருந்ததுடன் போட்டியை ஊக்குவிப்பதாகவும் இல்லை.

டாஸ்மாக் கடைகளில் பணமற்ற பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து கடைகளிலும் பிஓஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், தணிக்கை சோதனையில், மொத்தமுள்ள 5,259 கருவிகளில் 3,114 கருவிகள் (58 சதவீதம்) மட்டுமே செயல்பட்டன. எஞ்சியகருவிகள் பழுதடைந்து காணப்பட்டன. டாஸ்மாக் மீதான புகார்களில் அதிகமான புகார்கள் கடைகளில் அதிகபட்ச விலையைவிட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்பதுதான்.

உற்பத்தியாளர்களிடம் பாரபட்சம் காட்டாமல் சமச்சீராக கொள்முதல் செய்ய வேண்டும். தகுதியில்லாத ஏலதாரர்களுக்கு டெண்டர் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். முறையற்ற ஒப்பந்த கூட்டினை முறியடிக்க இ-டெண்டர் (மின்னணு ஏலம்) நடைமுறையை விரைவில் கொண்டுவர வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சில்லறை கடைகளில் பணமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும்.