மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2024 – யேர்மனி, ஒஸ்னாபுறுக் (Osnabrück)

598 0

யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்  கடந்த 22.06.2024 சனிக்கிழமை அன்று வடமாநிலத்தில் அமைந்துள்ள ஒஸ்னாபுறுக் (Osnabrück) எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்க் கல்விக் கழகத்திற்கு கீழ் இயங்கும் தமிழாலயம் ஒஸ்னாபுறுக்கின் நிர்வாகி  அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க, தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. இராஜகுமாரன் அவர்கள் யேர்மனிய நாட்டுத் தேசியக்கொடியினையும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் கனோவர் மாநிலப் பொறுப்பாளர்  திரு. துரையய்யா அவர்கள் தமிழீழத் தேசியக்கொடியினையும், தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனியின் கலைபிரிவின் துணைப் பொறுப்பாளர் முனைவர் விபிலன் சிவநேசன் அவர்கள் தமிழ்க்கல்விக்கழகக் கொடியினையும் ஏற்றிய பின்னர் அகவணக்கத்தோடு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியது.

மாவீரர்களின் நினைவு சுமந்து நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளின் தொடக்கத்தில் இடம்பெற்ற அணிநடையும், அணிநடைவீரர்கள் வழங்கிய கொடிமரியாதையும் அனைவரது மனங்களிலும் உற்சாக உணர்வினை ஏற்படுத்தியதோடு போட்டிகளுக்கான ஒழுக்கநேர்த்திகளையும் முன்னிறுத்தியது. தொடர்ந்து போட்டிகளில் பங்குபற்றிய வீரர்கள் மனமகிழ்வோடும் ஆர்வத்தோடும் ஒவ்வொரு போட்டிகளிலும் பதக்கங்களை வென்றெடுப்பதற்காக சளைக்காமல் போட்டியிட்டார்கள். யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரது நேர்த்தியான நடுவர்கள் எமது மாவீரத் தெய்வங்களை தமது நெஞ்சங்களில்ச் சுமந்து மிகக் கண்ணியத்தோடும் பணிவோடும் கடமையாற்றியமை பாராட்டுக்குரியது.

நடுவர்களது தீர்வுக்கமைய அதிக புள்ளிகளைப் பெற்று, 2024 ஆம் ஆண்டுக்கான வடமாநில மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டியில் மீண்டும் ஒஸ்னாபுறுக்(Osnabrück)தமிழாலயம் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து பீலபெல்ட் (Bielefeld)தமிழாலயம் இரண்டாம் இடத்தினையும் கனோவர் (Hannover)தமிழாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

நிறைவாக யேர்மன் நாட்டின் தேசியக்கொடியும் தமிழீழத் தேசியக்கொடியும் அதனோடு தமிழ்க் கல்விக்கழகக் கொடியும் இறக்கிவைக்கப்பட்ட பின்னர் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலோடும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்தோடும் 2024 ஆம் ஆண்டுக்கான வடமாநிலத்தின் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இனிதே நிறைவு பெற்றது.