சூரிய ஒளியின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றலை கொண்டே பறக்கக்கூடிய அதிநவீன கண்டுபிடிப்பான சோலார் இம்பல்ஸ் விமானம் இன்று அபுதாபி நகரில் தனது இறுதிகட்ட பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
ஒரேஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’ நவீன விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காரின் எடையளவே கொண்ட இவ்விமானம் நீளமான இறக்கைகளை கொண்டதாகும்.
சுற்றுச்சூழல் மாசில்லாத உலகம் என்ற பிரசாரத்துக்காக சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானிகளான ஆன்ட்ரே போர்ஸ்ச்பெர்க் மற்றும் பெர்ட்டான்ட் பிக்கார்ட் ஆகியோர் இந்த சோலார் இம்பல்ஸ் விமானத்தை மாறிமாறி ஓட்டியபடி உலகை சுற்றி வலம் வந்தனர்.
ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகை சுற்றி சுமார் 22,000 மைல் தூரத்தை தனது பயணத்தில் கடக்க திட்டமிடப்பட்டிருந்தது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமானம், ஒரு சொட்டு விமான எரிபொருளைக் கூட உபயோகப்படுத்தாமல் மூன்று கண்டங்களையும், இரண்டு கடற்பரப்புகளையும் கடக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி அபுதாபியில் இருந்து கிளம்பிய சோலார் இம்பல்ஸ் விமானம், உலகம் முழுவதும் பறக்கும் லட்சியப் பயணத்தை தொடரும் வகையில் சீனாவின் கிழக்கு பிராந்தியமான நான்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை நோக்கி புறப்பட்டது.
சுமார் 8,500 கிலோமீட்டர் தூரத்திற்கான இப்பயணத்தில் உலகின் முதல் சூரிய சக்தி விமானமான சோலார் இம்பல்ஸ், தனது மிக முக்கியமான பயணமான சீனாவில் இருந்து மத்திய பசிபிக் நோக்கி தொடர்ந்து 6 இரவு மற்றும் 6 பகல் நிற்காமல் பறக்கும் கனவு பயணத்தை தொடங்கியது.
இடைநில்லாமல் 118 மணிநேரம் தொடர்ந்து வானில் பறந்து 8,924 கிலோமீட்டர் தூரத்தை கடந்த விமானி ஆன்ட்ரே போர்ஸ்ச்பெர்க் இதன்மூலம் புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார்.
இதன் பின்னர், அமெரிக்காவின் பல மாநிலங்களின் வழியாக வலம்வந்து கொண்டிருக்கும் இந்த விமானத்தை ஒக்லஹாமா மாநிலத்தில் இருந்து ஓஹியோ மாநிலத்துக்கு ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் ஓட்டிச் சென்றார். சுமார் 16 மணிநேர பயணத்துக்கு பின்னர் கடந்த மாதம் 22-ம் தேதி ஓஹியோவில் உள்ள டேட்டன் விமான நிலையத்தில் அவர் பத்திரமாக தரையிறக்கினார்.
திட்டமிடப்பட்ட பயணநேரத்தைவிட ஒருமணி நேரத்துக்கு முன்னதாகவே ஓஹியோவுக்கு வந்துசேர்ந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் கட்டித்தழுவி வரவேற்று, பாராட்டினர்.
பின்னர், ஓக்லஹாமாவில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் பல மாநிலங்களின் வழியாக கடந்து வந்த சோலார் இம்பல்ஸ் விமானம், கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தை வந்தடைந்தது.
சுமார் பத்து நாட்களாக ஓய்வெடுத்த சோலார் இம்பல்ஸ், அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து செல்லும் சாதனை நோக்கத்தின் முக்கியகட்டமான 90 மணிநேர இடைநில்லா பயணத்தை ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. கடந்தவாரம் எகிப்து நாட்டின் தலைநகரமான கெய்ரோவை சென்றடைந்தது.
அங்கிருந்து, மீண்டும் அபுதாபி நோக்கி தனது இறுதிகட்ட பயணத்தை தொடங்க விமானி திட்டமிட்டிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்த பயண திட்டம் தள்ளிப்போனது. இந்நிலையில், கடந்த 24-ம் தேதி அதிகாலை கெய்ரோவில் இருந்து அபுதாபிக்கு சோலார் இம்பல்ஸ் விமானத்தின் இறுதிகட்ட பயணம் தொடங்கியது.
இன்று அதிகாலை சரியாக 4-05 மணிக்கு அபுதாபியில் தரையிறங்கிய சோலார் இம்பல்ஸ், ஒரேஒரு துளி பெட்ரோல் கூட செலவில்லாமல் உலகை சுற்றி சுமார் 22 ஆயிரம் மைல் தூரம் பறக்கும் தனது சாதனை பயணத்தை இன்று வெற்றிகரமாக நிறைவு செய்தது.