யாழில் திடீர் சோதனைக்குட்படுத்தப்படும் உணவகங்கள்

34 0

யாழில் அண்மைக்காலமாக சுகாதார சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் தொடர்ச்சியாக உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 12ம் திகதி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழாமினால் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட 09 வெதுப்பகங்கள் இரவு திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தன.

இதன்போது கொக்குவில் பகுதியில் சுகாதார சீர்கேடாக இயங்கிய 02 வெதுப்பகங்கள் அடையாளம் காணப்பட்டன. இரண்டு வெதுப்பகங்களிற்கும் எதிராக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் நேற்று (24) யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்குகளினை விசாரித்த நீதவான் A. A. ஆனந்தராஜா ஒரு வெதுப்பகத்தினை சீல் வைத்து மூடுமாறும், மற்றைய வெதுப்பகத்தினை திருத்த வேலைகளை உடன் மேற்கொள்ளுமாறும் பணித்து வழக்குகளினை எதிரவரும் 03 ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அத்துடன் உரிமையாளர்களை தலா ஒரு இலட்சம் பிணையிலும் விடுவித்தார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வெதுப்பகம் சீல் வைத்து மூடப்பட்டது.