புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமையேற்பு!

42 0

இலங்கை இராணுவத்தின் 64 வது இராணுவ பதவிநிலைப் பிரதானியாக விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, இராணுவத் தலைமையகத்தில் நேற்று (24) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.

1969 செப்டெம்பர் 16 ஆம் திகதி பிறந்த மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, குருநாகல் மலியதேவ வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளதுடன் 1988 ஜூலை 26 ஆம் திகதி 31 ஆம் இலக்க பாடநெறியின் ஊடாக இலங்கை இராணுவத்தில் இணைந்துக் கொண்டார்.

அவர் 1990 ஒக்டோபர் 5 ஆம் திகதி விஜயபாகு காலாட் படையணியில் அதிகாரவாணை கொண்ட அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பட்ட படிப்புகளை முடித்துள்ள இவர் இராணுவத்தில் 35 வருட சேவையை முடித்துள்ளார், தனது பணியில் பல கட்டளை பதவிகள், பணி நிலை மற்றும் ஆலோசனைப் பதவிகளை வகித்துள்ள அனுபவமும் திறமையும் கொண்ட சிறந்த அதிகாரியாவர்.

பயங்கரவாதத்திலிருந்து தாய்நாட்டை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக பங்களிப்பு வழங்கிய சிரேஷ்ட அதிகாரி, நான்கு முறை ரண விக்ரம பதக்கத்தையும், ரண சூர பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி ஆகியவற்றின் பட்டதாரி ஆவார், மேலும் இவர் தனது புதிய பதவியினை ஏற்பதற்கு முன்னதாக மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.