நடப்பாண்டில் ஹஜ் யாத்திரை மேற்கொண்டோரில் 1,300+ பேர் வெப்பத்தால் உயிரிழப்பு: சவுதி அரசு

53 0

 சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் பேர் யாத்திரை மேற்கொள்ள முறைப்படி பதிவு செய்யாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தகவலை சவுதி அதிகாரபூர்வமாக உறுதி செய்தது. யாத்திரை மேற்கொண்டவர்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியின் கீழ் வெகு தூரம் நடந்து வந்ததும், தங்கும் வசதி இல்லாததும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சவுதி அரசின் செய்தி நிறுவனமான சவுதி பிரெஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியா உட்பட சுமார் 10 நாடுகளை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக எகிப்து நாட்டை சேர்ந்த 658 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 630 பேர் முறைப்படி பதிவு செய்யாதவர்கள்.

வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4.65 லட்சம் பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும். அவர்களில் 1.4 லட்சம் பேர் முறைப்படி ஹஜ் யாத்திரைக்கு பதிவு செய்யாதவர்கள் என்றும் அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஃபஹத் அல்-ஜலாஜெல் தெரிவித்துள்ளார். மேலும், பலர் சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புக்கு காரணம் என்ன? – சவுதியில் இந்த ஆண்டு யாத்திரை மேற்கொண்டவர்கள் உயிரிழப்புக்கு காலநிலை மாற்றம் பிரதான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு யாத்திரை மேற்கொள்பவர்களின் வயதும் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் சவுதியில் சராசரியாக சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ம் ஆண்டு மெக்காவுக்கு அருகில் உள்ள மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 2,400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதே போல மெக்காவுக்கு அருகில் கடந்த 1990-ல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 1,426 பேர் உயிரிழந்தனர். கடந்த 1994-ல் 270 பேர், 1998-ல் 118 பேர் சவுதியில் யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் உயரிழந்தனர்.

கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் மக்கள் அதிகம் கூடும் மதம் சார்ந்த நிகழ்வுகளில் சுமார் 9,000 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சவுதியில் மட்டும் 5,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட தனித்தனி நிகழ்வுகளில் மொத்தமாக 2,200 பேர் உயிரிழந்துள்ளனர்.