தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அதிகபட்ச நடவடிக்கைகள்: உயர் நீதிமன்றத்தில் அரசு அறிக்கை

42 0

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக உச்சபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி வழக்கறிஞர்கள் கனிமொழி மதி, காந்திமதி, ரமாமணி, வாசுகி உள்ளிட்டோர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், பெண்களின் பாதுகாப்பிற்கு போதுமான சட்டங்கள் இருந்தாலும், அதை அமல்படுத்துவதில் நம்பகத்தன்மை இல்லையென்றும், பல வழக்குகளின் இறுதியில் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.மேலும், பொது இடங்கள் மற்றும் பொது போக்குவரத்தில் பெண்கள் பயணிக்கும் போது பாலியல் ரீதியிலான சீண்டலுக்குள்ளாகி வருகின்றனர். காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்கச் சென்றால் காவல்துறையினரும் உரிய முறையில் அணுகுவதில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள பிரதான பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பெண்களுக்காக பிரத்யேக காவல் நிலையத்துடன் கூடிய பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க வேண்டும்.

பணி மற்றும் கல்வி நிமித்தமாக நள்ளிரவு நேரங்களில் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு வரும் பெண்கள் பாதுகாப்பாக தங்க விடுதி வசதிகளை செய்துதர வேண்டும், எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் தமிழக சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் சார்பில் மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர் தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ”தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்து 28 பெண்கள் தங்கும் விடுதிகள் சமூகநலத்துறையால் அமைக்கப்பட்டு, அதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 594 பெண்களுக்கு பாதுகாப்பான இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரியும் பெண்களுக்காக அமைக்கப்பட்ட 11 மையங்களில் 500-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். பெண்கள் விடுதியில் ஒரு நாள், ஒரு வாரம், மாதம் அடிப்படையில் பெண்கள் தங்குவதற்கும் வசதிகள், சிசிடிவி கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் செய்து தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவியுடன் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 50-க்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நிர்பயா நிதி மூலம் பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு, பெண்களி்ன் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்ணுடன் கூடிய மையம், இலவச பேருந்து வசதி, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்கள் மூலமாக உச்சபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.