பிரிட்டனின் தொழில்கட்சி இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.
ஜூலை நான்காம் திகதி பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் தொழில்கட்சி மற்றும் பசுமை கட்சிகளின் பிரதிநிதிகள் பிரிட்டனில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ள தமிழ் தேர்தல் மேடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளதுடன் இலங்கையில் இடம்பெற்ற பாரிய அநீதிகளிற்கு நீதி பொறுப்புக்கூறலை உறுதி செய்வதை நோக்கிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக உறுதியளித்துள்ளனர்.
தமிழ் கார்டியன் பிரிட்டிஸ் தமிழ் கூட்டமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெஸ்ட்மினிஸ்டரில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட பிரிட்டனின் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டிற்கான அவர்களின் தொலைநோக்கையும் பிரிட்டனின் தமிழ் சமூகத்திற்கான தங்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் முன்வைத்தனர்.
கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட்இபசுமை கட்சியின் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆதரவு பேச்சாளர் பெனாலி ஹம்தாச்சே ஆகியோர் தமிழ்கார்டியன் ஆசிரியர் மருத்துவர் துசியன் நந்தகுமாரும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அங்கீகரித்தல் பாரிய அநீதிகளிற்கான சர்வதேச நீதி உட்பட முக்கிய விடயங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளித்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தை கென்சவேர்ட்டிவ் கட்சி தொடர்ந்தும் எழுப்பும் என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல தெரிவித்தார்.
ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த நடவடிக்கைகளிற்காக கென்சவேர்டிவ் கட்சி தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரத்தை எழுப்புவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம் இங்குள்ள தமிழ் சமூகத்தினர் அதற்கான அழுத்தங்களை கொடுத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை செய்வோம் என தெரிவித்தார்.
தடைகள்
இந்த நிகழ்வில் தடைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
தடைகள் குறித்து கருத்து தெரிவித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு வகையான பதிலே தடைகள் என குறிப்பிட்டதுடன் பிரிட்டன் அதனை பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.
எனினும் முன்கூட்டியே தடைகள் குறித்து விவாதிப்பது தடைகள் காரணமாக ஏற்படக்கூடிய தாக்கங்களை குறைக்கும் என்பதால் பிரிட்டன் அது குறித்து விவாதிக்கவிரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
பிரிட்டனின் கொள்கைகள் ஒருநாடு சார்ந்தது அல்ல என தெரிவித்த அவர் மாறாக குற்றங்களை அடிப்படையாக கொண்டவை எனவும் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் இலங்கை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது என நீங்கள் கருதக்கூடாது என கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல் தெரிவித்தார்.
இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அங்கீகரித்தல்
கனடா நாடாளுமன்றம் மே 18 ம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக நினைவுகூருவதை போல பிரிட்டன் நாடாளுமன்றம் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் பிரதிவெளிவிவகார அமைச்சர் அன்று மிட்ச்செல்
குறிப்பிட்ட நினைவுநாள் என்பது இல்லை என்றாலும் கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்கள் மற்றும் அவர்களை தேடும் உறவுகளை தொடர்ந்தும் நினைவுகூருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக இனப்படுகொலை என்ற சொல் குறித்து மேலும் கேள்வி எழுப்பியபோது யூதர்கள் இனவழிப்பு ருவாண்டா படுகொலை நினைவுவுகூருவதில் தனது பணியை நினைவுகூர்ந்தார்.
இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது குறித்து நான் மிகவும் கவனமாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.
இனப்படுகொலை இடம்பெறுகின்றது என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கின்றன என குறிப்பிட்ட அவர் பேரழிவை ஏற்படுத்திய அச்சத்தை ஏற்படுத்திய மோதல் இடம்பெற்றது அதன்போது மிக பயங்கரமான செயல்கள் இடம்பெற்றதை அவை பலரை அச்சத்திற்குள்ளாக்கியதை நாங்கள் கண்டோம் என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை அதனை மறுக்கவும் முடியாது எனவும் குறிப்பிட்டார்.
பரந்துபட்ட தடைகள்
இலங்கைக்கு எதிரான பரந்துபட்ட தடைகள் குறித்த கேள்விகளிற்கு பதிலளித்த அமைச்சர் வர்த்தக தடைகளை விதிப்பது பொருத்தமான விடயம் என நான் கருதவில்லை என தெரிவித்தார்.
நாங்கள் கருத்துவெளியிடும் ஏனைய பொறிமுறைகளே நீதியை முன்னெடுப்பதற்கு பொருத்தமானவை என அவர் தெரிவித்தார்.
சுயநிர்ணய உரிமை
சுயநிர்ணய உரிமை குறித்து கருத்து தெரிவித்த அவர் சுதந்திரத்திற்கான சர்வஜனவாக்கெடுப்பு குறித்து வேண்டுகோள்கள் காணப்படுகின்றன என தெரிவித்தார்.
ஆனால் ஒரு அரசாங்க அமைச்சராக நான் மற்றுமொரு நாட்டின் இறையாண்மை முடிவுகளில் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதில் மிகவும் கவனமாகயிருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்வீர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மன்னிக்கவும் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை என்னால் கொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.
ஜூலை நான்காம் திகதி நாங்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் உங்கள் சமூகத்துடனும் உங்களுடனும் நாங்கள் முன்னெடுத்துள்ள உரையாடல்களை தொடர்பாடல்களை நாங்கள் தீவிரப்படுத்த முடியும் என கருதுகின்றேன்இஇலங்கைக்குள் நல்லிணக்கத்தை கொண்டுபோய் சேர்ப்பதில் நாங்கள் நல்ல சக்தியாக விளங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தொழில்கட்சி
இதேவேளை தொழில்கட்சி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தை போல இல்லாமல் சர்வதேச சட்டத்தினை எங்களின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய கருப்பொருளாக நாங்கள் பின்பற்றுவோம் என தெரிவித்த அவர் தொழில் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மெர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதில் பிரிட்டனின் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வந்துள்ளார் என்பது உங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டார்.
மதிப்பீடு மற்றும் பொறிமுறையானது பிரிட்னின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திற்குள் உள்ளது எனினும் அந்த பொறிமுறையை இயக்குவது குறித்த அரசியல் உறுதிப்பாடு இல்லை என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் எங்களிற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது மனித உரிமை மீறல்களில் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என என தொழில்கட்சியின் ஆசியாவிற்கான நிழல் அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்தார்.
இலங்கையின் யுத்த குற்றவாளிகள் ஏன் பிரிட்டனின் தடைகளை இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இது ஆச்சரியமளிக்கின்ற கேள்விக்குரிய விடயம் என தெரிவித்தார்.
இரண்டுவாரங்களில் நான் அமைச்சரானால் மாக்னிட்ஸ்கி பாணியிலான பொருளாதார தடைகள் குறித்து வெளிவிவகார அலுவலகத்தின் மதிப்பீடுகள் என்ன என்பதையும் அவை பலனளிக்குமா என்பதையும் அவர்களிடம் மேற்கொள்கின்ற உரையாடல்கள் மூலம் நான் புரிந்துகொள்வேன் என அவர் தெரிவித்தார்.
இனப்படுகொலை என்பது நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்படவேண்டிய விடயம் என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்தலாம் என குறிப்பிட்டார்.
அதுவரை நாங்கள் மே மாத முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து முன்னெடுப்போம் என தெரிவித்த அவர் தமிழ் சமூகம் தங்களிற்கு எத்தகைய செயற்பாடுகள் பொருத்தமானது என கருதுகின்றதோ அந்த வகையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் என தெரிவித்தார்.