கல்முனை வடக்கு பிரதேச செயலக நுழைவாயில் கதவை பூட்டி மக்கள் போராட்டம்

113 0

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 91 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும கோஷத்துடன் பெருந்திரளாக குவிந்து வருகின்றனர்.

குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம்  திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 92 ஆவது நாளான இன்றும் அதிகளவான மக்கள்   பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பவணியாக செல்வதுடன் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம்   1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருந்தபோதிலும் ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு  வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை   ஆரம்பித்து உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம் பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிருவாக அடக்குமுறைகளையும் கணடித்தும்

திட்டமிடப்பட்டு  பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது எனவும்  அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் என மேலும் மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த பிரதேச செயலக விடயம் தொடர்பில் இறுதியாக கடந்த 2019 ஆண்டு  கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக உண்ணாவிரத போராட்டம்  பல அரசியல்வாதிகள் பிரமுகர்களின் போலி வாக்குறுதிகளால்   போராட்டத்தை கைவிடும் நிலை ஏற்பட்டிருந்தது.